118. | ஆடரங்கின் மேலும், அணிமா ளிகைகளிலும் | | சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய |
119. | பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக | | வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப் |
120. | பேணும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும், | | பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண் மறுகில் |
121. | காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் | | ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் - காண்டலுமே |
122. | கைதொழுவார்; நின்று கலைசரிவார்; மால் கொண்டு | | மெய்தளர்வார்; வெள்வளைகள் போய் வீழ்வார்; - வெய்துயிர்த்துப் |
123. | பூம்பயலை கொள்வார்; புணர்முலைகள் பொன்பயப்பார்; | | காம்பனைய மென்தோள் கவின்அழிவார்; - தாம் பயந்து |
118. ஆடு அரங்கு - நடன சாலை. சேடு அரங்கு மறுகு - பலவகை அரங்குகளை உடையதெரு ‘அரங்கின்மேல் நின்றும், மாளிகைகளினின்றும் மறுகின் கண்ணும், நெற்றியின் கண்ணும் புறப்பட்டு’ என்க. தெற்றி - திண்ணை. 119. மேல் (117) “வெள்வளையார்” என்றது பொது. இங்கு “மட நல்லார்” என்றது அவ்வப் பருவத்து, மகளிரைச் சிறப்பாகக் குறித்தது. எனவே, “அம் மட நல்லார்” எனச் சுட்டு வருவிக்க. இறுதியை முன்னர்க் கூறியது காதற்கு உரிமை யுடைமை பற்றி. சீர் - அழகு. 120. புலம்ப - தனிமைப் பட; அஃதாவது, தங்களை விட்டு நீங்கிப்போய்விட புறப் பட்டு - வெளியே வந்து வெளியே வருதல் நாண் இழந்ததன் அறிகுறியாம். சேண் - நீளம். மறுகு - தெரு. 121. கரிய யானையின் மேல் தோன்றுகின்ற வெண்குடை, கரிய மலைமேல் காணப்படும் முழுநிலவை ஒத்திருந்தது. (122) ‘பிள்ளையாரைக் காண்டலும்’ என்க. கலை - ஆடை. மால் - மயக்கம். மெய் - உடம்பு. வெய்து உயிர்த்து - வெப்பமாகப் பெருமூச்சு விட்டு. (123) பூம் பயலை - வெள்ளைப் பூப்போலும் பசலை; காதல் நோயால் உண்டாகும் நிற வேறுபாடுகளுள் வெண்ணிற மாவதை, ‘பசலை’ எனவும், பொன்னிறமாவதை ‘சுணங்கு’ எனவும் கூறுவர். சுணங்கே இங்கு “பொன்” எனப்பட்டது. காம்பு - மூங்கில். கவின் - அழகு. “தாம் பயந்து” என்றது, மேல் “பொன் பயப்பார்” என்றதனை மீட்டும் வழி மொழிந்தது.
|