பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை934

130.வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத்(து) அதரத் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக்

131.காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார்; - வாசச்

132.செழுமலர்த்தார் இன்றெமக்கு நல்காதே, சீரார்
கழுமலத்தார் கோவே! கழல்கள் - தொழுவார்கள்

133.அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையே’ என்று செப்புவார்; - நங்கைமீர்!


சொல்லப்படுவோர் பொது மகளிரே யன்றிக் குலமகளிர் அல்லர் என்பதை,

“வழக்கொடு சிவணிய வகைமை யான”1

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையாலும் உணர்க.

கமலத் தார் - தாமரை மலர் மாலை. இஃது அந்தணர்க்கு அடையாளமாவது. கோடும் - கைக் கொள்வோம். பண்பு - தங்கட்கு இயல்பாய் உள்ள குணம்.

கண்ணி - 130, 131: மகளிர் பிள்ளையார் மேல் காதற் போர் தொடுக்க எண்ணும் முறை. வடிக் கண் - மாவடுவைப் போலும் கண்கள். வாளி - கண். கண் வாளி, புருவ வில் - இவை உருவகம். அதரம் - கீழ் உதடு. தொண்டை - கொவ்வை, இஃது இதன் பழத்திற்கு ஆகுபெயர். அதரத் தொண்டை; உருவகம். பொடித்தல் - புளகித்தல்.(பூரித்தல்) (131) காசை - காயா. இஃது ஒரு செடி வகை. ‘பூவை’ என்னும் சொல்லப்படும். இங்கு இதுவும் இதன் மலருக்கு ஆகுபெயர். காயாம் பூ மகளிர் கூந்தலுக்கு உவமையாகும். மாயோனும் ‘காயாம் பூ வண்ணன்’ என்று சொல்லப் படுவான். ‘முலையை உடைய குழலார்’ என்க. காதற் கவுணியன் - காதலை உண்டாக்கிய கவுணியன். பூசற்கு அமைந்து - போர் செய்யத் துணிந்து. ‘பலரிடையே கூட்டத்துள் நில்லாது அருகில் நெருங்கிச் சென்று ஆடல் புரிந்தால் மயங்குவன்’ என்பது மகளிர் கொண்ட எண்ணம். (132, 133) ஒரு சார் மகளிர் எண்ணம் மேற் கூறியவாறாக, மற்றொரு சார் மகளிர் இங்ஙனம் இரங்குவாராயினர். அம் - அழகு. கோல் வளை - ஒழுங்காக இடப்பட்ட வளையல்.


1.பொருள் - புறத்திணையியல் - பாடாண் திணை.