134. | இன்றிவன் நல்குமே! எண்பெருங் குன்றத்தின் | | அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற |
135. | உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி | | நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் |
136. | பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள் | | மற்றுளரோ - என்று வகுத்துரைப்பார்; - மற்றிவனே |
137. | பெண்இரக்க, அன்றே, பிறைநுதலீர்! மாசுணத்தின் | | நண்ணு கடுவிடத்தால் நாள்சென்று - விண்ணுற்ற |
138. | ஆருயிரை மீட்(டு), அன்(று) அவளை அணிமருகல் | | ஊரறிய வைத்த(து) என உரைப்பார்; பேரிடரால் |
139. | ஏசுவார்; தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன் | | பேசுவார்; நின்று தம் பீடழிவார்; - ஆசையால் |
கண்ணி - 134: நல்குதல் - இரங்குதல். “நல்குமே” என்னும் வினா, ‘நல்கான்’ என்னுங் குறிப்பினது. ஆசு பற்றுக்கோடு (135) இங்கு, “பா” என்றது ஆகுபெயரால் பதிகத்தைக் குறித்தது. “ஒன்று” என்றது. “வாழ்க அந்தணர்” எனத் தொடங்கும் திருப்பாசுரப் பதிகத்தை. நேர்ந்து - எதிர்ப்பட்டு, (136) ஒரு திருப்பதிகத்தால் சமணரை வென்றது திருவருளாலன்றோ! “அத்தகைய திருவருளுக்கு உரியன் ஆகிய இவன் மகளிரை விழைவான்” எனக் கருதியது பேதைமை - என ஒரு சார் மகளிர் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு, ‘இவன் மகளிர் வயப்பட்டான்’ என்னும் துணிவினராயினர். “மற்று” என்பது மேற்கூறிய கருத்தை. மாற்றி நிற்றலால் வினை மாற்று. “இவனே” என்பதை “வைத்தது” என்பதன் பின்னே கூட்டுக. கண்ணி - 136, 137: “பிறை நுதலீர்” என்பதை, “வகுத்துரைப்பார்” என்பதன் பின்னர்க் கூட்டுக. இது மகளிர் ஒருவர் ஒருவரைத் தம்முள் முன்னிலைப்படுத்தியது. பெண் இரக்க - பெண் ஒருத்தி வேண்டிக் கொள்ள. மா சுணம் - பாம்பு. நாட் சென்று - வாழ்நாள் முடியப் பெற்று. மருகல், ஒரு தலம். (138) “வைத்தது” என்னும் தொழிற் பெயராய், ‘வைத்தவன்’ எனப்பொருள் தந்தது. ‘ஒரு பெண்ணிற்கு இரங்கியவன் இங்கு நம்மில் எவருக்கேனும் இரங்காமலா போய் விடுவான்’ என்றபடி. அவளை ஊரறிய வைத்தது, பலரையும் கூட்டித் திருமணம் செய்வித்தது. இவ்வாறு ஒருசாரர் கருத்து இருந்தது. கண்ணி - 139: ஏசுவார் - ஒருவர் மற்றொருவரை இகழ்வார்கள். ஏசறவு - துன்பம். பீடு - பெருமை (140) நலன் - அழகு. மெய் - உடம்பு.
|