பக்கம் எண் :

937ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

“சூழ் கிடப்ப” (26) என்பது அகழிச் சிறப்பு “முளை நிரைத்து” (27) என்பது முதல் “இஞ்சி அணிபெற்று” (30) என்பது காறும் மதிலின் சிறப்பு.

“பொங்கொளி சேர்” (30) என்பது முதல், “எழில் சிறப்ப” (34) என்பதுகாறும் நகரத்தில் உள்ள மாளிகை முதலியவற்றின் சிறப்பு. “மலர் மடந்தை... வாய்மைத்தாய்” (35) என்பதனால் நகரில் திருமகள் மகிழ்ந் துறைதல் கூறப்பட்டது.

“பொன்னும், மரகதமும்” - என்பது முதல் (36) நகரில் உள்ளாரது கொடைச் சிறப்பும், அடுத்து அவர்களது வாய்மைச் சிறப்பும் (38) கூறப்பட்டன.

“உண்மை மறை பயில்வார்” (38, 39) என்பது முதல் “நானூற்றுவர் மறையோர்” (44) என்பதுகாறும் சீகாழியில் உள்ள அந்தணர்களது சிறப்புக் கூறப்பட்டது.

“நா மன்னும்” (44) என்பது முதல் “மங்கையர்கள் கூட்டமும்” (48) என்பது காறும் சீகாழியில் உள்ள மகளிரது சிறப்புக் கூறப்பட்டது. அடுத்துச் சிறார் குழுக் கூறப்பட்டது.

“வேத ஒலியும்” (49) என்பது முதல், “செவிடுபட” (52) என்பது காறும் அகநகரில் எழும் ஒலி வகைகள் கூறப்பட்டன.

“பார் விளங்கு” (52) என்பது முதல், “மல்லைச் செழு நகரம்” (59) என்பதுகாறும் சீகாழியின் சிறப்பு, அதன் பன்னிரு பெயர்களோடு கூறப்பட்டது.

“மன்னவும்” (59) முதல், “வாய்ப்பவும்” (62) என்பதுகாறும் ஞானசம்பந்தரது அவதாரப் பயன்கள் சொல்லப்பட்டன.

“அவதரித்த வள்ளலை” (63) என்பது முதல் திருப்பதிகம் பாட வல்ல சேயை” (85) என்பது காறும் ஞானசம்பந்தரது பெருமைகளே சொல்லப்பட்டன. அவற்றிடையே கண்ணி 75 - 82-ல் அவர் நிகழ்ந்திய அற்புதங்களும், கண்ணி-83, 84ல் - அவர் அருளிச் செய்த பதிக வகைகளும் கூறப்பட்டன.

கண்ணி - 86 - 89: சீகாழி அந்தணர்கள் ஞானசம்பந்தரை வணங்கி உலாவாக எழுந்தருள வேண்டுதலும், அதற்கு அவர் இசைந்தருளலும் கூறப்பட்டன.

“நீதியால்” (89) என்பது முதல், “கோலம் புனைவித்து” (95) என்பது காறும் ஞானசம்பந்தருக்குச் செய்யப்பட்ட ஒப்பனை களில் பூச் சூடுதலாகிய தலைக்கோலமே கூறப்பட்டது.

“காதில்” (95) “உடல் புனைந்து” (100) என்பதுகாறும் அணிகல ஒப்பனை, திருநீறு கண்டிகை ஒப்பனை, உடை ஒப்பனை இவை கூறப்பட்டன.