பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை94

173.தவனே; உலகுக்குத் தானே முதல்;தான் படைத்தவெல்லாம்;
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே.

5



பரவிந்துவாகியசத்தியைத் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் தந்தையாகின்றான். பின்பு பரவிந்துவாகிய சத்தியினின்றும், அபரநாதமாகிய சிவன் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் மகனாகின்றான். பின்பு அபரநாதமாகிய சிவன் அபர விந்துவாகிய சத்தியைத் தோற்றுவிக்க அச்சத்தி யினின்றும் முதலில் சதாசிவனும், பின்பு மனோன்மணியும் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் தமையனாகின்றான். பின்பு அவ்விருவரும் சேர்ந்தே மகேசுரன் முதலிய தலைவர் களைத் தோற்றுவித்து, அவர்கள் வழியால் உலகத்தையும் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் கேள்வன் (கணவன்) ஆகின்றான். எனவே, இத்தத்துவக் குறிப்பே முறையில்லாத முறைகளாக நகைச்சுவை தோன்றச் சொல்லப்படுகின்றன என்க. இப்பாட்டிலும், 'திரிபு' என்னும் சொல்லணி வந்தது. பர மனை - அயல் வீடு. சரம், இங்கு பூங்கணையும், மன், மன்மதனுமாம். உடம்பு அட்டு - உடம்பை அழித்து. "உடம்பொடு" என்பதை 'உடம்பின்கண்' எனத் திரிக்க. வர மனை - மேலான மனைவி. கிளை - சுற்றம். "உடம்பின் கண் இடம் ஆம்" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. கிளை ஆகும் - கிளையாக இருக்கும்.

173. பொழிப்புரை: 'சிவபெருமானே எல்லோரிலும் மிக்கவன்; (எனவே, முதற் கடவுள்) உலகிற்கு முதல்வனும் அவனே. எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே. (உயிர்கள், பிறப்பெடுத்த உயிர்கள்.) அவன் அனைத்துப் பொருள்களிலும் அவையேயாய் நிறைந்திருக்கின்றான்' என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர். 'அவன் திருமாலை இடமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர்கள் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன்' என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.

குறிப்புரை: மிகுதியை உணர்த்தும் 'தவ'என்னும் உரிச் சொல்லடியாக, 'தவன்' என்னும் பெயர் பிறந்தது. 'சால்' என்பது அடியாக, 'சான்றோன்' என்பது பிறத்தல் போல. பவன் - தோன்றுபவன். பெறப்படுவன வேறாயினும் இரண்டும் பேறாதல் பற்றி, "சொல்லுவாரும்" என இறந்தது தழுவிய எச்சவும்மை தரப்பட்டது.