பக்கம் எண் :

95பொன்வண்ணத் தந்தாதி

174.

இடம்மால், வலந்தான்; இடப்பால் துழாய், வலப் பாலொண்கொன்றை;
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆதி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே(து) இவனுக்(கு) எழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.


175.

கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது; கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது; மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற(து) இமையவர்தம்
ஒத்துக் கொலாமிவர் கண்ட(து)இண் டைச்சடை உத்தமரே.



174.பொழிப்புரை: சிவபெருமான் ஓரமையத்தில் இடப் பக்கம் திருமாலும், வலப்பக்கம் தானுமான ஒரு வடிவத்துடன் நின்றான். (அது படைப்புக் காலம் என்க) அப்பொழுது இடப் பக்கம் துழாய் மாலையும், வலப்பக்கம் கொன்றைப் பூ மாலையும் - இடப்பக்கம் பொன்னாடையும், வலப்பக்கம் தோல் ஆடையும், இடப்பக்கம் சக்கரமும், வலப்பக்கம் மானும், இடப்பக்கம் கருநிறமும், வலப்பக்கம் செந்நிறமுமாய் இருந்தன. இனி இடப்பக்கம் குடக் கூத்தும், வலப்பக்கம் கொக்கரைக் கூத்தும் ஆடின.

குறிப்புரை: 'இஃதோர் அதிசய வடிவம்' என்பது குறிப்பெச்சம். இவ்வடிவம் 'அரியர்த்ததேசுரவடிவம்' எனப்படும். "எங்கள் கூத்தனுக்கு" என்பதை முதலில் கொண்டு உரைக்க. வட மால் - தாமோதரன், 'இடம், வடமாவது துகில்' என்க. துகில் - உயர்ந்த ஆடை. 'வலக்கையில் மான்' என்றது இவ்வடிவத்தில் மட்டும் சிறப்பாகக் கொண்டது. "இடம் ஆல் கரிது ஆல்" என்னும் 'ஆல்' இரண்டும் அசைகள். சேது - செய்யாது; செந்நிறமானது. உருவம் கூறியபின் செயல் கூறுகின்றார். ஆகலின், "இவனுக்கு" என மீட்டும் சுட்டிக் கூறினார். எழில் நலம், ஒருபொருட் பன்மொழி. குடம் கொண்டு ஆடிய கூத்தைக் "குடம்" என்றும்1 கொக்கரித்து ஆடிய கொடுகொடிக் கூத்தைக்2 "கொக்கரை" என்றும் கூறினார்.

175. பொழிப்புரை: 'இண்டை' என்னும் வகை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப்படி அமைந்த நடனம். எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு. இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை. இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்.


1. சிலம்பு - கடலாடு காதை - 55 உரை
2. மேற்படி 43.