பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை944

நேரிசை வெண்பா

1326.எனவே இடர் அகலும்; இன்பமே எய்தும்;
நனவே அரன் அருளை நாடும்; - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்தாழிக் கோ.

2

 கட்டளைக் கலித்துறை

1327.கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தள, வார்
ஏலப் பொழிலணி சண்பையர் கோனை, இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தன நற்றிமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.

3



அம்போதரங்கம் வரவில்லை; அளவெண் சிற்றெண்களே வந்தன. இப் பிறழ்ச்சிகளால் இக்கலிப்பா மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆயிற்று. ஆசிரியரைப் பொருளாகக் கொண்டமையால் ஒருபோகும் ஆயிற்று.

1326. குறிப்புரை: “புனல் மேய” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. எனவே - என்று வாயால் சொல்லவே. ஏகாரம், பிரிநிலை “சொல்லவே” என்னும் செயவென் எச்சம் காரணப் பொருட்டு. நனவு - விழிப்பு நிலை. அது கால ஆகுபெயராய் அதுபொழுது நிகழும் உணர்வைக் குறித்தது. விழிப்பு நிலையில் உணர்வு அரன் அருளை நாடுதல் உலகப் பற்று நீங்கினார்க்கல்லது இயலாது என்க. கமல (தாமரை) மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும். கொங்கு - பொன். அமலம் - தூய்மை.

1327. குறிப்புரை: கோலம் - அழகு. புல மணி - பல இடங்களிலும் வைத்து இழைக்கப்பட்ட இரத்தினங்கள். ‘பல மணி’ என்பது பாடமாகக் கொள்ளலும் ஆம். குந்தளம் - கூந்தல். குந்தளப் பொழில், உவமத் தொகை. ‘மாளிகைகட்குக் குந்தளம் போல விளங்குகின்ற பொழில்’ என்க. “ஞானசம்பந்தன்” என்பது இங்கு ‘அவன்’ என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்றது. “சம்பந்தன” என்பதில் ஈற்று அகரம் ஆறன் உருவு, ‘நற்றமிழேபோல்வனவாக (எனது பேதைமையால்) நினைத்துக்கொண்டு’ என இசையெச்சம் வருவிக்க. ‘சேவடியை’ - என இரண்டன் உருபு விரிக்க. ‘யானையைக் கோட்டைக் குறைத்தான்’ - என்பது போல, ‘சண்பையர் கோனைச் சேவடியைப் போற்றுவன்’ - என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது; முதன்கண் ஆறன் உருபு வருதல் சிறப்பு. “கவிகொண்டு” என்பது, “கொண்டு” என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. அணி புகழ் - அணிவிக்கப்படும் புகழ். “இறைவனைத்