பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை946

எழுசீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1329.நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப நனி

பனிமதி அணைந்த பொழில்சூழ்

பொலமதில் இரும்புகலி அதிபதி, விதம்பெருகு

புனிதகுணன், எந்தம் இறைவன்,

பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன், மிகு

பரசமய வென்றி அரிதன்

சலமலி தரும்கமல சரண் நினைவன், என்றனது

தகுவினைகள் பொன்றும் வகையே.

5

 


கவண் எறிதலாகக் கொள்க. “புனம் காத்தல் உமது தொழிலாக எனக்குத் தெரிய வில்லை; இனிய தோற்றத்தாலும், குரலாலும் என் உள்ளத்தைக் கவர்தலே உமது தொழிலாக எனக்குத் தெரிகின்றது” - என்பான். “சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்” - என்றான். “ஆனால்” என்பது தெளிவின்கண் வந்தது. மாற்றம் - மறுமொழி. ‘மறுமாற்றம்’ என்றும் சொல்லப்படும். ‘யான் வினாய வினாவிற்கு உரிய விடை’ என்பது பொருள். வாசி - மதிப்புக் குறைவு. குற மாது நல்லீர் - பிறப்பால் குற மகளிராய் உள்ள, அழகுடையவர்களே. இதனை முதலிற் கொள்க.

1329. குறிப்புரை: புவனி - புவனம்; உலகம் நிறை செய் - நிறைதலைச் செய்கின்ற. அஃதாவது, நிறைந்த, புகழ், இன்பம், பொழில், மதில் இரை அனைத்தும் புகலிக்கு அடை. பனி - குளிர்ச்சி. மதி - சந்திரன். இது பொழிலுக்கு அடை. விதம் பெருகு புனித குணன் - வகைகள் பலவாகிய தூய பண்புகளை உடையவன். இறைவன் - தலைவன். பல மலி - பலவாக நிறைந்த. ‘பலம் மலி’ எனப் பிரித்து, ‘பயன் நிறைந்த’ என்றும் பொருள் கொள்ளலாம். ‘தமிழன் விடங்கன், வடகலை விடங்கன்’ - எனத் தனித்தனி இயைக்க. “தமிழின்” என்பதில் ‘இன்’ சாரியை நிற்க, இரண்டன் உருபு தொக்கது. விடங்கன் - அழகன். பரசமய அரி; (கோளரி - சிங்கம்) வென்றி - வெற்றியை உடைய. ‘தன் சரண்’ என இயையும். சரண் - திருவடி. சலம் மலி - நீரில் நிறையப் பூக்கின்ற. “கமல சரண்” என்னும் உவமத் தொகை வட நூல் முடிபை ஏற்றது. “புகலி அதிபதி” முதலாகச் சொல்லப்பட்ட அவனது சரண்களை எனது வினைகள் பொன்றும் வகை நினைவன்’ - என வினை முடிக்க. தகுதி, இங்குத் தனக்கே உரிய ஆதல். பொன்றுதல் - அழிதல். “வகையால்” என்பதில் தொக்கு நின்ற மூன்றன் உருபு, ‘இது பயனாக’ என்னும் முதனிலைப் பொருளில் வந்தது.