பதின்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1333. | பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம், | | பைந்தரள நன்சிவிகை, செம்பொனணி நீடுகிற தாளம் | | கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக் | | கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம் | | கண்ட(து)அரு கந்தர்குல மொன்றிமுழு துங்கழுவி லேறக் | | கறுத்தது வினைப்பயன், மனத்திலிறை காதலது அன்றி | | விண்டதுவும் வஞ்சகரை; மஞ்சணவு கின்றமணி மாட | | வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே. |
தலைவனாக விரும்பத் தக்கவன்” - என்பதையும் தோழி உடம்பொடு புணர்த்துக் கூறினாள். “பண்டே உளன்” என்றதனால், ‘அவ்விருவரது நட்பு உறுதியாய் விட்ட ஒன்று’ எனக் குறித்தாள். 1333.குறிப்புரை: “மஞ்சு அணவுகின்ற” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. மஞ்சு - மேகம். அணவுகின்ற - பொருந்து கின்ற. பிரான் - தலைவன். “வேணுபுர நாதனும், வேதியர் சிகாமணியும் ஆகிய பிரான், அமுது செய்தது ... அருள்மேவு சிவஞானம்; கொண்டது சிவிகை, தாளம்; தமிழால் தவ குலத் தவர்களுக்கு இன்பம் கொடுத்தது எங்கள் பெருமான் அருள் படைத்து; கண்டது அருகந்தர் குலம் கழுவில் ஏற; கறுத்தது வினைப் பயன் விண்டது மனத்தில் இறை காதல் அன்றிய வஞ்சகரை” எனக் கூட்டி வினைமுடிவு செய்க. “செய்தது, கொண்டது, கறுத்தது. வினையாலணையும் பெயர்கள். இவை எழுவாயாய் நிற்க, அத்தொழில்களுக்கு உரிய செயப்படுபொருள்கள் பெயர்ப் பயனிலையாய் நின்றன. இது செயப்படு பொருளை வினைமுதல் போலக் கூறுவதொரு வழக்காம். கறுத்தது - வெகுண்டது; வெகுண்டு நீக்கியது. செய்யுளுக்கு ஏற்ப, “கொடுத்தல்” எனக் கூறினாரேனும் அதனையும் ஏனைவற்றோடு இயைய, ‘கொடுத்தது’ என்றே கொள்க. “கொடுத்தது, கண்டது” என்னும் தொழிற் பெயர் எழுவாய்கள் “படைத்து ஏற” என்னும் வினையெச்சப் பயனிலையைக் கொண்டன. “தமிழை” என்றது, ‘தமிழால்’ என உருபுமயக்கம். “விண்டது” என்னும் தொழிற்பெயர். எழுவாய், “வஞ்சகரை” என்னும் உருபேற்ற பயனிலையைக் கொண்டது. “விண்டதுவும்” என்னும் உம்மை சிறப்பு. ‘அன்றிய’ என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. அன்றிய - நீங்கிய. “காதல் அது” என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி.
|