பக்கம் எண் :

967ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

வேறு

1358.கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு

குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்,

அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்

அணியான புகலிநக ரணைவான் கனைகடலின்

முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்

முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை

படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி

பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.



துறையாகச் செய்யப்பட்டது. “பெண் கொடியே” என்பதை முதலிற் கொள்க. இது தலைவியைத் தலைவன் விளித்தது. எனது உள்ளமும் நின் வசமே நிறுவி - எனது உள்ளத்தை எப்பொழுதும் உன்னிடத்திலே நிற்கும்படி நிறுத்தி. வருகின்றன் - வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் நான் உன்பால் வந்து கொண்டே யிருக்கின்றேன். (அவ்வாறு இருக்கவும்) யான் - நான். குறை கொண்டு - உன்னோடு எப் பொழுதும் இருக்க இயலாத குறையைப் பொறுத்துக் கொண்டு. தனித்து அமரும் அது - தனித்து உறைகின்ற அந்த இடம். அருகும் புனல் வெஞ்சுரம் நீ இறையும் நினையாது - நீர் கிடையாத பாலை நிலம் என்பதை நீ சிறிதும் நினையாமல் என்னின் முன் அதர் வந்து பிழை செய்தனை. என்னினும் முற்பட்டு இந்த வழியிலே வந்து பிழைசெய்து விட்டாய்; (சற்றே தங்கிப் போவம்) “தமிழாகரனது அருளைப் பேணலர் போல வந்து பிழை செய்தனை” - என்க. தலைவன் தனது ஊர் சுரத்தை அடுத்து இருத்தலை, “சுரம்” என்றே கூறினான். “உள்ளமும்” என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். புயல் - மேகம்.

1358.குறிப்புரை: இப்பாட்டு அகப் பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையுறும் துறையாகச் செய்யப்பட்டது. “தலைவியை என் கருத்துக்கு இசையும்படி செய்வதாயின், அதன் பொருட்டு நீ எந்தப் பணியை இட்டாலும் அதை நான் செய்வேன்’ என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். திருக்கோவையாரில் “மருக்கோ கடலின் விடுதிமில்”1என்னும் பாடலோடு இதனை ஒப்பிட்டுக் காணலாம். ‘கொடியில்’ என ஏழாவது விரிக்க. மேதை - பேரறிஞன். சுப சரிதன் - நல்ல ஒழுக்கம் உடையவன். ‘தமிழ் விரகனது புகலி நகர்’ என்க.


1.பாட்டு - 63.