பக்கம் எண் :

969ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

பதின்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1360.

தொகுவார் பொழில்றற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்

தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருங்கியசீர்

மிகுகா ழியன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்

விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்

மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்

வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)றூழி இலக்கிதமாய்த்

தகுவாழ்வு நிலைத் தொழில்சே ரறமா னபயிற் றுவர்மா

சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக்கடலே.

நேரிசை ஆசிரியப்பா

1361.

கருமங் கேண்மதி! கருமங் கேண்மதி!

துருமதிப் பாண கருமங் கேண்மதி!



1360.குறிப்புரை: இப்பாட்டு, திருஞானசம்பந்தரது திருவடிகளையே துணையாகக் கொள்பவர் அடையும் பயன்களைக் கூறுகின்றது. “பொழில் சுற்றியனவும், மதி (சந்திரன்) தோயப் பெறுவனவும் ஆகிய மதில்களினுள், கனம் ஆர் (மேகங்கள் தவழும்) திருப்பொழில்களை யுடைய மாளிகைகளும், மாடங்களும் நெருங்கியுள்ள சீர் மிகு காழி” - என்க. “தமிழாகரனது மேதகு கழல், விரை ஆர் கழல், கமலக் கழல்” - எனத் தனித் தனி முடிக்க. பொன் - அழகு. புனை தார் விரை - தோளில் அணிந்த மாலை (பாதம் அளவு தூங்கிப்) புரளுதலால் உண்டாகும் நறுமணம் கமலக் கழல் தாமரை மலர் போலும் திருவடி. மகர ஆதர நித்தில நீர் நிலைஆர் புவி - சுறா மீன்களுக்கு வாழும் இடமாயும், முத்துக்களை உடையதாயும் உள்ள கடல் நீரின்கண் நிற்றல் பொருந்திய பூமி. வரலாறு - பண்டு தொட்டு உயிர் வாழ்ந்து வரும் வரவு (பிழைப்பிலர் - நீங்கப் பெறாதவராய் ஊழிதொறு) ஊழி இலக்கிதமாய் - பல பல ஊழிகளிலும் பலராலும் காணப் படுபவர்களாய்) அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி ஏடெழுதினோரால் விடப்பட்டதாக எண்ண வேண்டி யுள்ளது. இலக்கிதம் - இலக்கியம்; குறிக்கொண்டு நோக்கப்படும் பொருள். ‘அறம்’ என்னாது “எழில் சேர் அறம்” என்றமையால் அவை சிவபுண்ணியங்களாம் என்க. பயிற்றுவர் - எப்பொழுதும் செய்வார்கள். சதுர் - திறல். இப்பாட்டினை, “பன்னிரு சீர்க் கழிநெடிலடியை உடையது” - எனக் கொள்வாரும் உளர். அது சிறவாமையை அறிந்து கொள்க.