பக்கம் எண் :

971ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

1361.குறிப்புரை: இப்பாட்டும், மேல், “கைதவத்தால் என்னிடைக்கு நீ வந்தது” - எனப் போந்த அப்பாட்டின் துறையை உடையதே. “துரு மதிப் பாண” என்பதை முதலிற் கொண்டு, - கருமம் கேள்! நின்கண் (உன்னிடத்தில்) நிரம்பிய (இசையியல்பு முற்றிய) பாடல்கள் ஓடாநின்றன. (எழுந்து சென்று எங்கும் பரவாநின்றன; ஆயினும் நீயோ,) பசி நலிய இணைத்துக் காந்திய உதரக் கனல் தழைத்து எழுதலின் உடல் வற்றி நரம்பு எழுந்து, சில சுள்ளிகளால் இயற்றப்பட்ட குரம்பையைச் செலுத்தனைய உருவத்தைக் கொண்டு, (இந்நிலைமையில்) நல் யாழைச் சுமந்து நகர் மனைக்கடை தோறும் சென்றுழிச் சென்றுழி பலி பெறாது வன் துயரையே (உடையை ஆகின்றாய்) ‘இவ்வன்துயர் நீங்கி இரு நிதி எய்தி இன்புற வேண்டும்’ என்னும் எண்ணம் நுனது உள்ளத்து உள்ளதாயின் ‘கழுமலம்’ என்னும் பதிக்குத் தலைவனும்.... ஆகிய ‘பரசமய கோளரி’ எனச் சிறப்புப் பெற்ற அவன்மீது யான் புனைந்த தமிழ்ப் பாடலைக் கற்று, என் மீதும் சிறிது இரக்கம் கொண்டு என் உள்ளத்திலும் தன்மீது செல்லும் அன்பினை அருளிய அந்த ஆண் தகையது புகழை நிரம்ப உணர்ந்து, அவனது வாயிலில் போய் நின்று (பாடு) பாடினால் நீ மாப் பெருஞ் செல்வம் மன்னுதி - என முடிக்க.

‘துர்மதி’ என்னும் ஆரியச் சொல் தமிழில் உகரம் பெற்று, “துருமதி” என வந்தது. துர் மதி - தீய புத்தி. கருமம் - செய்யத் தக்க காரியம். அடுக்கு வலியுறுத்தற் பொருட்டு. நீ தலைவன் ஆணையில் நின்று பரத்தையரிடம் சென்று; - தலைவர் உங்களையே விரும்புகின்றான் - என விருப்ப மொழி கூறியும், அங்ஙனமே என்னிடம் வந்து, - தலைவர் சிறிதும் தவறிலர்; அவர்மீது நீவிர் வீண் பழி சுமத்த வேண்டா - என அமைதி கூறியும் இவ்வாறு பொய்யையே பேசித்திரிவதால் நீ அடைந்த பயன் வயிற்றுப் பிழைப்பும் கிடையாத மிகு வறுமையே யன்றி வேறில்லை” என்பாள், “நிரம்பிய பாடல் நின்க ணோடும் (ஆயினும்) சில் பலி பெறாது வன்துயர்” (உறுகின்றாய்) என்றாள். ஆசிரியர் தாம் புனைந்த தமிழை தலைவி புனைந்ததாகவும், தமக்கு இரங்கி அன்பை அருளியதைத் தலைவிக்கு இரங்கி அன்பை அருளியதாகவும் பிரபந்தத் துறைக்கு ஏற்பக் கூறினார். ஆயினும் கருத்து வேறாதல் வெளிப்படை. ‘கோளரிக்கு’ என உருபு விரிக்க. ‘புனை என் தமிழ்’ என மாற்றிக் கொள்க.

உதரக் கனல் - வயிற்றுத் தீ. இறுகுடி - முறுக்கு ஏறி, குரம்பை - குடில். உறு செறுத்து அணைய உருவு - மிகவும் உறுதிபடச் செய்தால் ஒத்த தோற்றம். பலி - பிச்சை. ‘சோலை அறை வண்டு வயலில் (சென்று) அகவ (ஒலிக்க) - என்க. கோள் மீன் - முதலை. குண்டு அகழ் - ஆழமான அகழி. ‘அகழியோடு உயர்தரு பதணம்’ என்க. பதணம் - மதிலின் உறுப்பு. கடு நுதி - கொடிய முனை. கழுக்கடை - சூலம். மிடைதல் நெருங்குதல். பருமுரண் கணையக்