பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை980

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

39. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

கொச்சக ஒருபோகு

1. ஞானப்பால்உண்டது
திருச்சிற்றம்பலம்

1374.

பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்

கோவாக் குதலை சிலம்பரற்ற - ஓவா(து)

அழுவான் ‘பசித்தான்’ என்(று) ஆங்(கு) இறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்


தொகை - தொகுப்பு; இங்கு அற்புதங்களின் தொகுப்பே குறிக்கப்பட்டது. அப்பெயர் ‘திரு’ என்னும் அடையடுத்து ஆகுபெயராய் அத்தொகுப்பினைக் கூறும் பிரபந்தத்தைக் குறித்தது. எனவே, ‘திருத்தொகை’ என்பது ஒருசொல் நீர்மைத்தாக, ‘ஆளுடைய பிள்ளையார்’ என்பது செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாம் வேற்றுமைப் பொருளில் தொக்கு முடிந்ததாம்.

இப்பிரபந்தம் முழுது வெண்டளையானே வரினும் ஈற்றடி முச்சீரால் முடியாது நாற்சீரால் முடிதலின் இது வெண்கலிப்பா ஆகாது, “அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகிய” கொச்சக ஒருபோகாம்1

அடி-1 பூ - பொலிவு. திரு - அழகு. நுதல். நெற்றிய சுட்டி யணியும் (அடி-2) குதலை மொழியும் குழவிப் பருவத்தைக் குறித்தன. கோவாக் குதலை - ஒழுங்குபட வாராத குதலைச்சொல். அஃது ஆகுபெயராய் அதனைப் பேசும் பிள்ளையைக் குறித்தது. ‘குதலை (அடி-3) அழுவானை இறைவன் காட்ட’ - என இயைக்க. (அடி-2) ‘சிலம்பு அரற்றுமாறு (காலை உதைத்துக் கொண்டு) அழுவானை” என்க. ‘அழுவானை’ என்பதில் இரண்டாம் உருபு தொகுக்கப் பட்டது.


1.தொல் - பொருள் - செய்யுளியல்