உணர்வு இலா மயக்கினை - மெய்யுணர்வோடு சிறிதும் தொடர்பில்லாத திரிபினை. ஒழிய - யாவரும் விட்டு அகலும்படி. வாய்மைக் கவிதையில் - உண்மைகள் நிறைந்த பாடல்களில். உபரி பாகப் பொருள் பரப்பிய - கலைகளின் முடிநிலைப் பொருள்களைப் பரக்க அருளிச் செய்தவரும். அலகில் ஞானக் கடலிடைப்படும் அமிர்த யோகம் - அளவற்ற ஞான நூலாகிய கடலைக் கடைந்தவழித் தோன்றும் அமுதமாகிய சிவயோகத்தால். சிவ ஒளிப்புக அடியரேமுக்கு அருளினைச் செயும் - சிவசோதியில் கலக்கும் பேற்றினை அடியோங்களுக்கு அருளியவரும் ஆகிய அரைய தேவத் திருவடிகள் - திருநாவுக்கரசு தேவராகிய சுவாமிகள். (தலைவர்) புலனொடு ஆடித் திரி மனத்தவர் - ஐம்புலன்களோடே எப்பொழுதும் பழகித் திரிகின்ற மனத்தை உடையவரது பொறி செய் காமத் துரிசு அடக்கிய புனித நேசத்தொடு - ஐம்பொறிகளின் வழிச் செல்கின்ற ஆசைகளாகிய குற்றங்களை அடக்கிய வேறொரு தூய அன்புடனே. தமக்கையர் புணர்வினால் உற்று உரை செய - தமக்கையார் திருவருள் வழிப்பட்ட அறிவினால் அறிந்து சொல்ல. (அச்சொல் வழியே ஒழுகி. சுலவு சூலைப் பிணி கெடுத்து தமது வயிற்றுட் குடைந்த சூலைநோயைப் போக்கி. ஒளிர் சுடு வெண் நீறிட்டு அமன் அகற்றிய துணிவினால் - ஒளி வீசுகின்ற, நன்கு சுடப்பட்ட வெள்ளிய திருநீற்றைப் பூசிக்கொண்டு (முன்பு கொண்ட) சமணக் கோலத்தை நீக்கிய தெளிவினால் முப்புரம் எரித்தவர் சுழலிலே பட்டிடு தவத்தினர் - திரிபுரங்களை எரித்தவராகிய சிவபெருமானது ஆணையிலே பொருந்திச் செய்யும் தவநெறியில் நின்றவராவர். குறிப்பு: ‘பெரு மயக்கினை ஒழிய, கவிதையில் பல பொருள் பரப்பியதன் விளைவாகிய’ யோகத்தினால் சிவ ஒளிப்புக அருளினைச் செயும் அரைய தேவத் திருவடிகள், புலனொடு ஆடித் திரிமனத்தவர்பால் (எழுகின்ற) காமம் ஆகிய குற்றம் (தம் மனத்திலே எழாதவாறு) அடக்கியதனால் தோன்றிய தூய அன்போடு (பத்தியோடு) கூடித் தமக்கையர் உரை செய (அவ்வழி ஒழுகி) சூலைப் பிணி கெடுத்து வெண்ணீறு இட்டு, சமணக் கோலத்தை நீக்கிய துணிவினால் முப்புரம் எரித்தவரது சுழலிலே பட்டிடு தவத்தினர் ஆவர்’ எனக் கூட்டி வினை முடிவு செய்க.
|