பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
102

மாணிக்கவாசகர் வரலாறு

இவைகள் நல்ல நிறமும், நடையும், நல்ல சுழிகளும் பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும் தானளித்த பொருளைவிடப் பல மடங்கு பெறுமதி மிக்க குதிரைகளைப் பெற்றதாக மகிழ்ந்து அவைகளைப் பந்தியில் சேர்க்குமாறு பணித்தனன். வணிகர் தலைவன் குதிரைகளையெல்லாம் கயிறுமாறிக் கொடுக்கும்படி தன்னுடன் வந்தவர்களிடம் கூறி அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.

பரிகள் நரிகளாயின 

அன்று இரவு நடுநிசியில் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின. பந்தியில் இருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்று ஊர்மக்கள் அஞ்சும்படி மூலை முடுக்குகளில் எல்லாம் ஒடி மறைந்தன. காலையில் குதிரைச் சேவகர்கள் உள்ளம் பதறி, உடல் நடுங்கி, அரசனிடம் வந்து முறையிட்டனர். இச்செய்தியைக் கேட்ட மன்னன், சினம் பொங்கி, அமைச்சர்களை அழைத்து, திருவாதவூரர் செய்த வஞ்சனையைக் கூறி, படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தித் தண்டனை அளித்து அவரிடத்தில் கொடுத்த பொருள்களையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு, உத்தர விட்டான். படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றி ஒறுத்தார்கள். வாதவூரர் இறைவன் திருவருளை நினைந்து எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று கூறி வருந்தி நின்றார்.

வைகையில் வெள்ளம் 

வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான், வைகையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வைகையில் தோன்றிய பெருவெள்ளம் மதுரைமாநகர் முழுவதும் விரைந்து பரவத்தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர்மக்கள் ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி மன்னனிடம் சென்று முறையிட்டனர். பாண்டியனும் ஆற்றுவெள்ளத்தைத் தணிக்க, பூ, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகிய தேயல்லாமல் சிறிதும் குறையாதது கண்டு அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்து சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்று நன்கு தெளிந்து அவரை விடுவித்து மதுரை மாநகரை இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும் என்று அரசன் வேண்டிக் கொண்டான். வாதவூரரும் திருவருளை எண்ணி வழுத்தினார். வெள்ளத்தின் வேகம் ஒரு சிறிது குறைந்தது.