பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
110

அந

மாணிக்கவாசகர் வரலாறு

அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தண வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாசக உட்பொருள்: 

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் ‘திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து’ எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார். காலையில் கோயிலில் இறைவனைப் பூசை செய்ய வந்த அருச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு அதையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர்வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப்  பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங்கினார். முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளைத் தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டனர். அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து ‘இந்நூற் பொருள் இச்சபையில் எழுந்தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்’ என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார். இவ்வற்புத நிகழ்ச்சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர். நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட்கொண்டருளினான்.

அடிகள் காலம்: 

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர், ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய