பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
119

1

1. இயற்கைப் புணர்ச்சி

கிளவி எண்: 1

இயற்கைப் புணர்ச்சி என்பது பொருளதிகாரத்திற் கூறப்பட்ட தலைமகனும், தலைமகளும், அவ்வாறொரு பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடைநிற்பப் பான்மைவழியோடி ஓராவிற் கிருகோடு தோன்றினாற்போலத் தம்முள் ஒத்த அன்பினராய் அவ்விருவரொத்தார் தம்முட்டாமே கூடுங்கூட்டம். அது நிகழுமாறு-

    காட்சி யையந் தெளித னயப்பே
    யுட்கோ டெய்வந் துணிதல்கைக் கிளையொடு
    கலவி யுரைத்த லிருவயி னொத்தல்
    கிளவி வேட்ட னலம்புனைந் துரைத்தல்
    பிரிவுணர்த் தல்லொடு பருவர லறித
    லருட்குண முரைத்த லணிமை கூற
    லாடிடத் துய்த்த லருமை யறிதல்
    பாங்கியை யறித லெனவீ ரொன்பா
    னீங்கா வியற்கை நெறியென மொழிப.

-திருக்கோவைநெறிவிளக்கம்

_______________________________________________

    இதன் பொருள்:  காட்சி, ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தைமகிழ்தல், புணர்ச்சிதுணிதல், கலவியுரைத்தல், இருவயினொத்தல், கிளவிவேட்டல், நலம்புனைந்துரைத்தல் பிரிவுணர்த்தல், பருவரலறிதல், அருட்குணமுரைத்தல், இடமணித்துக்கூறி வற்புறுத்தல், ஆடிடத்துய்த்தல், அருமையறிதல், பாங்கியையறிதல் என இவை பதினெட்டும் இயற்கைப் புணர்ச்சியாம் என்றவாறு. அவற்றுள்-