பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
123

இயற்கைப் புணர்ச்சி

திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவம் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திருவென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயிலென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலையென்றும் வழங்கும் இத்தொடக்கத்தனவெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க.

    வளரென்பதற்கு வளருமென்றும்மைகொடுத்து உரை வாய்பாடு காட்டியதெற்றிற்கு மேலாலோ வளரக்கடவதென்பது கடா. அதற்குவிடை வளர்ந்த தாமரை வளராநின்ற தாமரையென்று கழிகாலத்தையும் நிகழ்காலத்தையுங்கூறாது, மேல்வருங்காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக் கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழுதுள்ளதனைக் கூறிற்றாம். ஆகலான் வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார், ஆயின் உம்மைச்சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை?. இது செய்யுட் சொல்லாதலால் வந்தது. செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும், யாறொழுகும், மலைநிற்கும் என்றற்றொடக்கத்தன வற்றானறிக. அன்றியும்,

    முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
    யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து
    மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.

-தொல்.சொல்.வினை-43

என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குமென்றேயறிக.