பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
150

2

பாங்கற் கூட்டம்

2.1 பாங்கனை நினைதல்

   
பாங்கனை நினைதல் என்பது தெய்வப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற் கருமைநினைந்து வருந்தாநின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து, இவள் அவட்குச்சிறந்த துணையன்றே; அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச்  சிறந்தானைக்கண்டு இப்பரிசுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லையெனத் தன்காதற் பாங்கனை நினையாநிற்றல், அதற்குச் செய்யுள்-

19. பூங்கனை யார்புனற் றென்புலி
      யூர்புரிந் தம்பலத்துள்
   ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
      பிரானடித் தாமரைக்கே
   பாங்கனை யானன்ன பண்பனைக்
      கண்டிப் பரிசுரைத்தால்
   ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
      பாவையை யெய்துதற்கே

19

_______________________________________________________________

2.1.  எய்துதற் கருமை யேழையிற் றோன்றப்
    பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.

    இதன் பொருள்: 
பூ கனை ஆர் புனல் புலியூர் அம்பலத்து புரிந்து - பூக்களையுடைத்தாய் முழங்குதனிறைந்த புனலையுடைத்தாகிய தென்புலியூரம்பலத்தின்கண் விரும்பி ; ஆங்கு எனை ஆண்டு கொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே பாங்கனை - அவ்வாறென்னை யாண்டுகொண்டு ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை; யான் அன்ன பண்பனை - என்னையொக்கு மியல்பையுடையானை; கண்டு இப்பரிசு உரைத்தால்-கண்டு நிகழ்ந்த விப்பரிசையுரைத்தால்; மடம் பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார்-மடப் பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின்கண் என்னைத்தடுப்பார் யாவர்? ஒருவருமில்லை எ-று.

   
அம்பலத்துளாடும் பிரானெனவியையும், தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார் ஆண்டவாறு சொல்லுதற் கருமையான். ஏழையினென்புழி. இன்: ஏழனுருபு; அது புறன்டையாற் கொள்ளப்