2
பாங்கற் கூட்டம்
2.23 மொழிபெறவருந்தல்
மொழிபெற வருந்தல் என்பது தளர்வுநீங்கிய
பின்னர்ச் சார்தலுறாநின்றவன் ஒருசொற் பெறுமுறையாற் சென்றுசார வேண்டிப் பின்னும் அவளைப்பெரும்பான்மைகூறி
ஒரு சொல் வேண்டி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
41. காவிநின் றேர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென்
னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே.
41
______________________________________________________________
2.23. கூடற் கரிதென
வாடி உரைத்தது.
இதன் பொருள் : மா
இயன்றன்ன மெல் நோக்கி - மானோக்கத் தான் இயன்றாற்போலும் மெல்லிய நோக்கையுடையாய் ; காவி
நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமலத் தேவி என்றே ஐயம் சென்றது அன்றே - நஞ்சாகிய
நீலப்பூ நின்று அழகைக் கொடுக்கும் மிடற்றையுடையவரது வளவிய தில்லைக்கணுண்டாகிய கண்ணிற்கு
ஆருந் தாமரைப்பூவின் வாழுந் தேவியோவென்று ஐயநிகழ்ந்தது; அறியச் சிறிது நின் வாய் திறவா
விடின் - தெளிந்தறியச் சிறிதாயினும் நின்வாய் திறவாதொழியின்; அமிழ்தே - அமிழ்தமே;
அணங்கே-அணங்கே; இன்று அழிகின்றது என் ஆவி அன்றே-இப்பொழுதழிகின்றது என்னுயிரன்றே, இதனை நீ
கருதா தொழிகின்ற தென்னை! எ-று.
தேவியென்பது பெரும்பான்மையாகலின்,
தேவியென்றே யையஞ்சென்றதென ஐயத்துள் ஒருதலையே பற்றிக் கூறினான். அறியவென்னும் வினையெச்சமும்
சிறிதென்னும் வினையெச்சமும் திறவாவிடி னென்னுமெதிர்மறையிற் றிறத்தலோடு முடிந்தன. அமிழ்தே
யணங்கேயென்றான். இன்பமுந் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல்.
41
|