பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
175

2

பாங்கற் கூட்டம்

2.24 நாணிக்கண்புதைத்தல்

   
நாணிக்கண்புதைத்தல் என்பது தலைமகன் தன்முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது நாணி, ஒருகொடியினொதுங்கி, தன் கண்புதைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -

42. அகலிடந் தாவிய வானோ
        னறிந்திறைஞ் சம்பலத்தின்
   இகலிடந் தாவிடை யீசற்றொ
        ழாரினின் னற்கிடமாய்
   உகலிடந் தான்சென் றெனதுயிர்
        நையா வகையொ துங்கப்
   புகலிடந் தாபொழில் வாயெழில்
        வாய்தரு பூங்கொடியே.

42

_______________________________________________________________

2.24.  ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து
     
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

   
இதன் பொருள்: அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் - உலகத்தைத் தாவி யளந்த வானவன் வணங்கப்படுவதென்றறிந்து வணங்கும் அம்பலத்தின்கணுளனாகிய இகலையுடைய விடங்களிலே தாவும் விடையையுடைய ஈசனைத் தொழாதாரைப்போல; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை - துன்பத்திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனதுயிர் நையாதவண்ணம்; பொழில் வாய் எழில் வாய்தரு பூங் கொடியே - பொழிலிடத்துளவாகிய அழகுவாய்ந்த பூவை யுடையகொடியே; ஒதுங்கப் புகலிடம் தா-யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ-று.

   
உகலிடம் - உகுதற்கிடம்; உகுதலையுடைய விடமெனினுமமையும், ஆயிடை - தலைமகன் அவ்வாறு கூறியவிடத்து. தனிநின்று-ஆற்றுவிப்பாரையின்றி நின்று. ஆற்றாது-நாணினானாற்றாது. வேய்-வேய்த்தன்மை. மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.

42