2
பாங்கற் கூட்டம்
2.25 கண்புதைக்கவருந்தல்
கண்புதைக்க வருந்தல் என்பது
தலைமகள் நாணிக்கண் புதையாநிற்ப, இவள் கண் புதையாநின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச்
செய்யுமென் றாகாதேயென உட்கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின் நின்மேனி முழுதும்
புதைப்பாயாகவெனத் தலைமகன் தன்வருத்தமிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
43. தாழச்செய் தார்முடிதன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.
43
______________________________________________________________
2.25. வேற்றருங் கண்ணிணை
மிளிர்வன வன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்
கென்றது.
இதன் பொருள்: தாழச்செய்தார்
முடிதன் அடிக்கீழ் வைத்து-தன் கட்டாழ்ந்தவர்களுடைய முடிகளைத் தன் திருவடிக்கீழ் வைத்து; அவரை
விண்ணோர் சூழச் செய்தான் அம்பலம் கைதொழாரின் - அவர்களை விண்ணோர் பரிவாரமாய்ச் சூழும்
வண்ணஞ் செய்தவனது அம்பலத்தைக் கைதொழாதாரைப் போல; உள்ளம் துளங்க போழச்செய்யாமல் வை
வேல் கண்புதைத்து - நெஞ்சந் துளங்கப்போழாமற்கூரிய
வேல் போலுங் கண்களைப் புதைத்து; பொன்னே
பொன்னே; நீ என்னை
வாழச் செய்வதாய்-நீ என்னை வாழும் வண்ணஞ் செய்தாய்; வாள் நுதலே - வாணுதலையுடையாய்; நின்னைச்
சுற்று முற்றும் புதை - என்னுள்ளந் துளங்காமை வேண்டின் நின்னைச் சுற்று முழுதும் புதைப்பாயாக எ-று.
தாழச்செய்தாரென்ப தனை
ஒருசொல்லாக்காது தாழும் வண்ணம் முற்றவஞ் செய்தாரென் றானும், தம்மைச்செய்தாரென்றானும்
ஒருசொல் வருவித்தும், போழச்செய்யாமலென்புழியும் போழும் வண்ணமொரு தொழிலைச் செய்யாமலென
ஒரு சொல் வருவித்தும், விரித்துரைப்பினுமமையும். வாழச்செய்தாயென்பது: குறிப்புநிலை. புதைத்த
வென்பதூஉம் பாடம். வேற்றருங்கண் - வேல்போலுங்கண். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை யுணர்த்தல்.
43
|