பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
177

2

பாங்கற் கூட்டம்

2.26 நாண்விடவருந்தல்

   
நாண்விட வருந்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமை மிகுதிகூறக்கேட்டு, ஒருஞான்றுந் தன்னைவிட்டு நீங்காதநாண் அழலைச் சேர்ந்த மெழுகுபோலத் தன்னைவிட்டு நீங்காநிற்ப, தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

44. குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
      கூத்தனை யேத்தலர்போல்
   வருநாள் பிறவற்க வாழியரோ
      மற்றென் கண்மணிபோன்
   றொருநாள் பிரியா துயிரிற்
      பழகி யுடன்வளர்ந்த
   அருநா ணளிய வழல்சேர்
      மெழுகொத் தழிகின்றதே.

44

______________________________________________________________

2.26.  ஆங்ங னம்கண் டாற்றா ளாகி
      நீங்கின நாணொடு நேரிழை நின்றது.


   
இதன் பொருள்:  என் கண்மணி போன்று - இன்றியமையாமையால் என் கண்மணியை யொத்து; உயிரின் பழகி - உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப் பழகி; ஒருநாள் பிரியாது - ஒருபொழுதும் பிரியாது; உடன் வளர்ந்த-என்னுடனே வளர்ந்த; அரு அளிய நாண் - பெறுதற்கரிய அளித்தாகிய நாண்; அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது-அழலைச்சேர்ந்த மெழுகையொத்து என்கணில்லாது அழியாநின்றது, அதனான் - குரு நாள் மலர்ப் பொழில் சூழ்தில்லைக்  கூத்தனை ஏத்தலர் போல் வருநாள் பிறவற்க - நிறத்தையுடையவாகிய நாண்மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட தில்லைக் கணுளனாகிய கூத்தனையேத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப்பாரன்றே அவர்களைப் போல மேல் வரக்கடவநாளில் யான் இவ்வாறு பிறவாதொழிக எ-று.

   
வருநாள் பிறவற்க வென்பதற்கு ஏத்தாதாரைப்போல வருந்த இவ்வாறு பயின்றாரைப் பிரியவரு நாள்கள் உளவாகா தொழிகவெனினுமமையும், வாழியென்பது இத்தன்மைத்தாகிய இடுக்கணின்றி இந்நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும்: அசைநிலை. ஆங்ஙனங் கண்டு-அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.