பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
194

4

மதியுடம் படுத்தல்

4.8 மொழிபெறாதுகூறல்

   
மொழிபெறாது கூறல் என்பது பெயர்வினாவவும் வாய் திறவாமையின், இப்புனத்தார் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு வாய்திறவாமையை விரதமாகவுடையராதல், அதுவன்றி வாய்திறக்கின் மணிசிந்து மென்பதனைச் சரதமாக வுடையராதல், இவ் விரண்டனு ளொன்று தப்பாதென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் -


57. இரத முடைய நடமாட்
        டுடையவ ரெம்முடையர்
   வரத முடைய வணிதில்லை
        யன்னவ ரிப்புனத்தார்
   விரத முடையர் விருந்தொடு
        பேச்சின்மை மீட்டதன்றேற்
   சரத முடையர் மணிவாய்
        திறக்கிற் சலக்கென்பவே.

57

_______________________________________________________________

4.8.  தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
     மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.


   
இதன் பொருள் இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர்-இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் - எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப்புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் - அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல்-அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர்-பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர் எ-று.

   
இரதமென்றது நாட்டியச்சுவையையன்று, கட்கினிமையை. நடமென்றது நாட்டியத்தையன்று, கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண் டென்பதுபட வினைமாற்றாய் நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு: இனிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தல்.

57