பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
195

4

மதியுடம் படுத்தல்

4.9 கருத்தறிவித்தல்

   
கருத்தறிவித்தல் என்பது நீயிர் வாய்திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க, இத்தழை நும் மல்குற்குத் தகுமாயின் அணிவீராமினெனத் தழைகாட்டிநின்று தன்கருத்தை அறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்-

58. வின்னிற வாணுதல் வேனிறக்
        கண்மெல் லியலைமல்லல்
   தன்னிற மொன்றி லிருத்திநின்
        றோன்றன தம்பலம்போல்
   மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
        வெண்ணகைப் பைந்தொடியீர்
   பொன்னிற வல்குலுக் காமோ
        மணிநிறப் பூந்தழையே.

59

_______________________________________________________________

4.9.  உரைத்த துரையாது
     கருத்தறி வித்தது.


   
இதன் பொருள்: வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்லியலை-வில்லினியல்பையுடைய வாணுதலையும் வேலினியல்பையுடைய கண்களையுமுடைய மெல்லியலை; மல்லல் தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன் தனது அம்பலம்போல் - அழகை யுடைய தன்றிருமேனியொன்றின் கண் இருத்திநின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப் பேர் எழில் வெள்நகைப் பைந்தொடியீர்-மின்னினியல்பையுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும் வெள்ளிய முறுவலையுமுடைய பைந்தொடியீர்; மணி நிற பூந் தழை பொன் நிற அல்குலுக்கு ஆமோ-மணியினது நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ? தகுமாயின் அணிவீராமின் எ-று.

   
பொன்னிறத்திற்கு மணிநிறம் பொருத்தமுடைத்தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று. ஆமோவென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும் கொள்வாரது தலைமையையும் விளக்கி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.

58