பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
206

7

குறையுற வுணர்தல்


7.3 அவள் குறிப்பறிதல்

   
அவள் குறிப்பறிதல் என்பது தலைமகனது நினைவறிந்த தோழி இவளிடத்து இவனினைவேயன்றி இவனிடத்து இவள் நினைவுமுண்டோவெனத் தலைமகளை நோக்க, அவண்முகத்தேயும் அவன் செயல் புலப்படக்கண்டு. இவ்வொண்ணுதல் குறிப்பு மொன்றுடைத்தென அவணினைவுந் துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள்-

65. பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
        செய்யிற் பிறவியென்னும்
   முழைகொண் டொருவன்செல் லாமைநின்
        றம்பலத் தாடுமுன்னோன்
   உழைகொண் டொருங்கிரு நோக்கம்
        பயின்றஎம் மொண்ணுதல்மாந்
   தழைகொண்டொருவனென் னாமுன்ன
        முள்ளந் தழைத்திடுமே.

65

___________________________________________________________

7.3.  ஆங்கவள் குறிப்புப்
     பாங்கி பகர்ந்தது. 


   
இதன் பொருள் : பிழைகொண்டு ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் - பிழைத்தலைப் பொருந்தித் தன்கட் செல்லாது நீங்கி இவ்வாறு கெடாதே ஒருவன் அன்புசெய்யுமாயின்; பிறவி என்னும் முழை கொண்டு செல்லாமை - அவன் பிறவியென்னாநின்ற பாழி யையடைந்து செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் - அம்பலத்தின்கணின்றாடும் எல்லாப்பொருட்கும் முன்னாயவனது; உழைகொண்டு - உழைமானை மருணோக்கத் தாலொத்து; இரு நோக்கம் ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் - வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத கள்ளநோக்கமுமாகிய இருநோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்; மாந் தழைகொண்டு ஒருவன் என்னா முன்னம் - மாந்தழையைக் கொண்டொருவனென்று சொல்லுவதன் முன்; உள்ளம் தழைத்திடும் - உள்ளந் தழையாநின்றாள். அதனால் இவள் குறிப்பு இவன் கண்ணதேபோலும் எ-று.