உ
உ
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரைத்
தருமை ஆதீனம்
26 ஆவது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய
ஆசியுரை
ஆரணங்காண் என்பர் அந்தணர்; யோகியர்
ஆகமத்தின்
காரணங்காண் என்பர்; காமுகர் காமநன்
னூலதென்பர்:
ஏரணங்காண் என்பர் எண்ணர்: எழுத்தென்பர்
இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக்கோவையைச்
செப்பிடினே.
-ஆன்றோர் வாக்கு
அறம் பொருள் இன்பம் வீடு்:
மனிதன் அடையவேண்டிய பயன்கள் நான்கு.
அவை அறம், பொருள், இன்பம், வீடு, என்பன. இவற்றை வடநூலார் தர்மம், அர்த்தம் (பொருள்),
காமம், மோட்சம் என்பர். இக்கருத்தையே நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் “அறம் பொருள்
இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” (நன்னூல் பொது. 10) என்னும் நூற்பாவால் தெரிவித்துள்ளார்.
இவற்றுள் அறமும், பொருளும்,
புறப்பொருளாகும். இன்பமும் வீடும் அகப்பொருளாகும். இவற்றுள் முதலும் கடையும் இன்றி அஃதாவது முதலில்
உள்ள அறத்தையும், கடைசியில் உள்ள வீட்டையும் விட்டு இடையில் உள்ள பொருளையும், இன்பத்தையுமே
எல்லோரும் அடைய விரும்புகின்றனர்.
இன்பம் துய்க்க வேண்டுமெனில்
அதற்குப் பொருள் வேண்டும். பொருள் ஈட்டவேண்டுமெனில் அதற்கு முதல் வேண்டும். அம்முதலை வைத்துத்
தொழில் செய்யவேண்டுமெனில் அதற்கு ஒரு கடை வேண்டும். முதல் தான் முதலில் உள்ள அறமாகும்.
கடைதான் கடைசியில் உள்ள வீடாகும். முதலும் கடையும் இன்றி பொருள் ஈட்டவும் இன்பம் நுகரவும்
முடியாதன்றோ?
|