பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
210

8

நாண நாட்டம்

8.1 பிறைதொழுகென்றல்

   
பிறைதொழு கென்றல் என்பது பிறையைக்காட்டித் தான்றொழுதுநின்று, நீயும் இதனைத் தொழுவாயாகவெனத் தோழி தலைமகளது புணர்ச்சி நினை வறியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

67. மைவார் கருங்கண்ணி செங்கரங்
        கூப்பு மறந்துமற்றப்
   பொய்வா னவரிற் புகாதுதன்
        பொற்கழற் கேயடியேன்
   உய்வான் புகவொளிர் தில்லைநின்
        றோன்சடை மேலதொத்துச்
   செவ்வா னடைந்த பசுங்கதிர்
      வெள்ளைச் சிறு பிறைக்கே.

67

______________________________________________________________

8.1.  பிறைதொழு கென்று பேதை மாதரை
    நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.


   
இதன் பொருள்: மறந்தும் பொய் அவ் வானவரில் புகாது-மறந்தும் பொய்ம்மையையுடைய அவ்வானவரிடத்துப் புகாதே; தன் பொன் கழற்கே அடியேன் உய்வான் புக - தன்னுடைய பொன்னா னியன்ற கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்ய வேண்டிப் புக; ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது ஒத்து-விளங்குந் தில்லைக்கட் கட்புலனாய் நின்றவனுடைய சடைக்கண்ணதாகிய பிறையையொத்து; செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு-செக்கர்வானை யடைந்த செவ்விக் கதிரையுடைய வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மை வார் கருங்கண்ணி-மையையுடைய நெடிய கரிய கண்ணினையுடையாய்; செங்கரம் கூப்பு-நினது செய்ய கைகளைக் கூப்புவாயாக எ-று.

    மறந்து மென்பது ஈண்டு அறியாதுமென்னும் பொருட்டாய் நின்றது. மற்று; அசைநிலை. மற்றையென்பது பாட மாயின், அல்லாத பொய்வான வரென்றுரைக்க. இனமல்ல ராயினும் இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார். “மூவரென்றே யெம் பிரானொடு மெண்ணி” (தி.8 திருச்சதகம் பா.4) என்பதூஉம், அக்கருத்தே பற்றிவந்தது. பிறர்கூறும் பெருமை அவர்க்கின்மையிற்