பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
212

8

நாண நாட்டம்

8.3 சுனையாடல் கூறிநகைத்தல்

   
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல்கண்டு, சுனையாடினால் இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந்தருமாயின் யானுஞ் சுனையாடிக் காண்பேனெனத் தோழி தலைமகளோடு நகையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

69. செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
   அந்நிற மேனிநின் கொங்கையி
        லங்கழி குங்குமமும்
    மைந்நிற வார்குழல் மாலையுந்
       தாதும் வளாய்மதஞ்சேர்
    இந்நிற மும்பெறின் யானுங்
       குடைவ னிருஞ்சுனையே.

69

___________________________________________________

இணங்கு ஆகும்-நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ-று.

இன்: அல்வழிச் சாரியை. மலயத்திக் குன்றமென்று இயைப்பாருமுளர். 68

8.3.  மாண நாட்டிய வார்குழற் பேதையை
     நாண நாட்டி நகை செய்தது.


   
இதன் பொருள்: செந் நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம்போல் - செய்ய நிறத்தையுடைய மேனிக்கண் வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லை யம்பலத்தையொக்கும்; அம் நிறமேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் - அழகிய நிறத்தையுடைத்தாகிய மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத்தழிந்த குங்குமத்தையும்; மைநிற வார்குழல் மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும்; தாதும் - அளகத்தப்பிய தாதையும்; வளாய் மதம் சேர் இந் நிறமும் பெறின் - மேனிமுழுதையுஞ் சூழ்ந்து மதத்தைச் சேர்ந்த இந் நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ் சுனை யானும் குடைவன்-நீ குடைந்த பெரிய சுனையை யானுங்குடைவேன் எ-று.