| 10 
மடற்றிறம்  
10.1 ஆற்றாதுரைத்தல்
 ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன்
மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட அவ்விருவருழைச் சென்று நின்று, நீயி்ர் அருளாமையின்
என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமினெனத் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
 
73. பொருளா வெனைப்புகுந் தாண்டுபுரந்தரன் மாலயன்பால்
 இருளா யிருக்கு மொளிநின்ற
 சிற்றம் பலமெனலாஞ்
 சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
 செவ்வாய்த் துடியிடையீர்
 அருளா தொழியி னொழியா
 தழியுமென் னாருயிரே.
 
73 
______________________________________________________________ 
10.1.  மல்லற்றிரள் வரைத்தோளவன்சொல்லாற்றாது சொல்லியது.
 
 இதன் பொருள் : புகுந்து
என்னைப் பொருளா ஆண்டு - தானேவந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு; புரந்தரன்மால்
அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்றசிற்றம்பலம் எனல்ஆம் - இந்திரன் மால் அயனென்னும்
அவர்களிடத்து இருளாயிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங்
குழல் வெள் நகைச் செவ்வாய்த் துடி இடையீர் - சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ்
செய்ய வாயினையுமுடைய துடியிடையீர்; அருளாதொழியின் என் ஆருயிர் ஒழியாது அழியும் - நீயிர்
அருளாதொழியின் எனதாருயிர் தப்பாமலழியும், அதனான் அருளத்தகும் எ-று.
 
 தொகையின்மையிற் பாலென்பதனை
எல்லாவற்றோடுங் கூட்டுக. சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை. மடற்றிறங் கூறுகின்றானாகலின்,
அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது-சொல்லுதற்கும் ஆற்றாது. மெய்ப்பாடு:
அழுகை, பயன்: ஆற்றாமை யுணர்த்துதல்.
 
73 |