10
மடற்றிறம்
10.2 உலகின்மேல்
வைத்துரைத்தல்
உலகின்மேல் வைத்துரைத்தல் என்பது
ஆற்றாமைகூறி அது வழியாக நின்று, ஆடவர் தம்முள்ளமாகிய மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப்
பெறுதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும் அதனைப் பெறுவரென உலகின்மேல் வைத்துக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
74. காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
74
______________________________________________________________
10.2.
புலவேலண்ணல் புனைமடலேற்
றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது.
இதன் பொருள்: காய் சினவேல்
அன்ன மின் இயல் கண்வலை- காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; கலந்து
வீசினபோது உள்ளம் மீன் இழந்தார்-மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய
மீனையிழந்தவர்கள்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து-பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய
ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஓர் கிழி பிடித்து-ஒரு கிழியைக் கையிற்பிடித்து;
பாய் சினமா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர்-பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர்,
தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து எ-று.
மின்னியல்வேலென்று கூட்டினு
மமையும். இன்: அல்வழிச்சாரியை, கண்ணென்வலையென்பதூஉம் பாடம். மகளிரென ஒரு சொல் வருவியாது
கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும். உள்ளமிழந்தவர் உள்ளம்பெறுமளவும் தம்வய மின்றி மடலின்
வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தாவாகக் கொள்க. சாந்தும் எருக்குமென இரண்டாகலின்
ஈசனவெனப் பன்மையுருபு கொடுத்தார். பாய்சினமென்புழிச் சினம் உள்ளமிகுதி. உய்த்துரைத்தது-குறிப்பாலுரைத்தது.
74
|