பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
26

கற

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

கற்பித்த  வழி நிற்றலையுமே குறிக்கிறது. பெண்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் கற்பித்த வழி நிற்றலே கற்பெனப் போற்றி வந்துள்ளனர். “கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை” என்னும் கொன்றைவேந்தன் 14ஆம் வரியும் நினைவு கூறத் தக்கது.

    கற்பு என்ற சொல், பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவது காணலாம். ஞானசம்பந்தரை வெப்புநோய் வாதத்திற்கு அழைத்தபோது அவர் மதுரைத் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதர் சந்நிதியில் “காட்டுமாவதுரித்து” என்று தொடங்கும் பதிகம் (தி. 3 ப. 47 பா.1) பாடினார். அப்பதிகத்தில் “மண்ணகத்திலும்” என்று தொடங்கும் மூன்றாம் பாடலின் இறுதி வரியில் “தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே” என்றருளினார். இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நீர்மை இலாச்செயலை அழிக்கத் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதே பொருளாகக் கொள்ள வேண்டும். இங்கு கற்பு என்பதற்கு மகளிரின் ஒழுக்க நெறிகள் என்று கொள்ளல் பொருந்தாது.

    இதே போன்று திருப்பழுவூர்த் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் “மேவயரும் மதிலும்” என்று தொடங்கும் பாடலில் மூன்று, நான்காம் வரிகள் சிந்திக்கற்பாலன.

    “பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ்சொல்லிப்
     பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே”

(தி.3 ப.34 பா.6)

என்பது அப்பாடற்பகுதி. இதன் கருத்து பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு மகளிர் இறைவன் புகழைக் கற்பித்து வருகிறார்கள் என்பதாகும். இங்கு கற்பு என்பது கற்பித்தலையே குறிக்கிறது. இது பற்றித் தருமை ஆதீனக் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் மகளிர் ஒழுக்கத்தையும், கற்றலையும் குறிக்குமாறு சிவபோகசாரம் என்னும் நூலில் அருளியுள்ளதும் இங்கு சிந்தித்தற்குரியது. அப்பாடல் வருமாறு: 

    நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
    பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி
    கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த
    விழல்எனவே நீத்துவிடு.

- சிவபோக. பா. 130

    இப்பாடலில் கற்பிலரும் என்பது கல்லாதவரையும், கற்பொழுக்கம் இல்லாதவரையும் குறித்தல் காணலாம்.