பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
270

12

சேட் படை

12.23 குறிப்பறிந்து கூறல்

   
குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து முகங்கொண்டு, அதுவழியாகநின்று, யானை கடிந்த பேருதவியார் கையிற்றழையுந் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது குறைமுடிக்க வேண்டாவோவெனத் தோழி நயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

112. தவளத்த நீறணி யுந்தடந்
        தோளண்ணல் தன்னொருபால்
   அவளத்த னாம்மக னாந்தில்லை
        யானன் றுரித்ததன்ன
   கவளத்த யானை கடிந்தார்
        கரத்தகண் ணார்தழையுந்
   துவளத் தகுவன வோசுரும்
        பார்குழல் தூமொழியே.

112

_____________________________________________________________

12.23. ஏழைக் கிருந்தழை
     தோழிகொண் டுரைத்தது.

இதன் பொருள்: சுரும்பு ஆர் குழல் தூ மொழி - சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்; தவளத்த நீறு    அணியும் தடந் தோள் அண்ணல்-வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல்;தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான்-தனதொரு பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த யானை - அவன் அன்றுரித்த யானையை யொக்குங் கவளத்தையுடைய யானையை; கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ-நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கையவாகிய கண்ணிற்காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா எ-று.

   
தவளத்தநீறு கவளத்தயானை என்பன; பன்மையொருமை மயக்கம். சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும், சத்திதத்துவத்தினின்றுஞ் சதாசிவதத்து வந்தோன்றலின் மகனாமென்றும் கூறினார். “இமவான்கட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன்” (தி.8 திருப்பொற்சுண்ணம். பா.13)