12
சேட் படை
12.26 தழைவிருப்புரைத்தல்
தழை விருப்புரைத்தல் என்பது
தலைமகளைத் தழை யேற்பித்துத் தலைமகனுழைச் சென்று நீ தந்த தழையை யான்சென்று கொடுத்தேன்;
அதுகொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகளது விருப்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
115. பாசத் தளையறுத் தாண்டுகொண்
டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.
115
____________________________________________________________
12.26. விருப்பவள் தோழி
பொருப்பற் குரைத்தது.
இதன் பொருள்: பாசத்தளை
அறுத்து-பாசமாகிய தளையிற் பட்டுக்கிடப்ப அத்தளையை யறுத்து; ஆண்டு கொண்டோன் தில்லை யம்பலம்
சூழ் தேசத்தன-தனக்குக் குற்றேவல் செய்ய என்னை யடிமைகொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த
தேசத்தின் கணுள்ளன; செம்மல்! நீ தந்தன-அச்சிறப்பே யன்றிச் செம்மால் நின்னாற் றரப்பட்டன;
சென்று யான் கொடுத்தேன்-அவற்றைச் சென்று யான் கொடுத்தேன்; பேசில் பெருகும்-கொடுப்ப ஆண்டு
நிகழ்ந்தன வற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல்-சுருங்கிய மருங்குலையுடையாள்;
பூந்தழை-அப்பூந்தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை-அரைத்துத்
தன்மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதனவில்லை எ-று. என்றது இவை வாடுமென்று
கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன்மேனிமுழுதும் படுத்தாள் என்றவாறு. பெயர்த்தென்பது பெயர்ந்தென
மெலிந்துநின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனை
யாற்றுவித்தல்.
சேட் படை முற்றிற்று.
|