பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
29

New Page 1

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

“அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா
     மணி உம்பரார் அறியா மறையோர் அடி வாழ்த்தலரில்”

(தி.8 கோவை பா.16)

எனத் தில்லைப் பெருமான் தனக்கு அணியும் அமிழ்தும் ஆவியுமாக இருக்கின்றமையைப் புலப்படுத்தியிருத்தலையும், தலைவியின் கண்ணழகைப் பாராட்டுமிடத்து, “ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் பாசத்திற்காரென்று” (தி.8 கோவை பா. 109) என அவள் கண்களை வருணித்தலையும், பாங்கன், “சிறைவான், புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்” எனப் போற்றுதலையும் (தி.8 கோவை பா.20) தோழி “பல்பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன்” (தி.8 கோவை பா. 314) எனத்தன் சிவபக்தியைப் புலப்படுத்தலையும் தாய், சுடரோடு இரத்தல் என்னும் துறையில் “நான்நணுகப் பெற்றேன் பிறவிபெறாமல் செய்தோன் தில்லை” (தி.8. கோவை பா.232) எனத் தில்லையிறைவன் தனக்குப் பிறவிவேர் அறுத்ததையும் குறிப்பிடுதலைக் காணலாம்.

    இவ்வாறு கிளவித் தலைவன் முதலானோரும் திருச்சிற்றம்பல முடையானைப் புகழ்ந்துபோற்ற அருளிச் செய்துள்ள இக்கோவைநூல் பக்திமருந்தைத் தேனோடு கூட்டித் தருதல் போல உள்ளதாதலை இந்நூலிற் காணலாம்.

பேராசிரியரின் உரைமாட்சி:

   
திருச்சிற்றம்பலக்கோவையார் இயற்கைப்புணர்ச்சி முதலாக இருபத்தைந்து அதிகாரங்களோடு நானூறு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இக்கோவைநூலுக்குத் திட்பநுட்பங்களுடன் பேராசிரியர் என்பார் உரைவரைந்துள்ளார். பேராசிரியரால் இயற்றப்பெற்ற இவ்வுரை திருவாதவூரடிகள் உணர்த்த எடுத்துக் கொண்ட அறிவனூற் பொருளையும் உலக வழக்கையும் தெள்ளிதின் விளங்கும் முறையில் அமைந்துள்ளது.

    தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் வேறு. திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர் வேறு என்பதை இந்நூலின் உரைமாட்சியில் செந்தமிழ்க் கலாநிதி திரு. டி.வி. கோபாலய்யர் தெளிவுபடுத்தியுள்ளமை காண்க.

திருவளர் தாமரை:

    இந்நூலின் தொடக்கப் பாடல் இயற்கைப் புணர்ச்சியில் காட்சி என்ற துறைக்குரியது.