பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
30

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

    திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங் காந்தள்கொண் டோங்கு
தெய்வ   
    மருவளர் மாலைஓர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே.

(தி.8 கோவை பா.1)

என்பது பாடல், தலைமகன் தலைவியைக் காணுகின்றான். அப்பெண் சிவபிரான் உறையும் தில்லையில் வியக்கத்தக்க நிலையில் மலர்ந்துள்ள தாமரை, நீலம், குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய மலர்களால் தொடுத்த மாலைபோன்ற தோற்றத்தினளாய், அன்னம்போன்ற நடையினை உடையவளாய், காமனின் வெற்றிக் கொடிபோலக் காட்சி தருகிறாள். இப்பாடலில் திரு என்பதற்கு கண்டாரால் விரும்பப்பெறும் அழகையே திரு எனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர்.

    இப்பாடலில் கூறப்பட்டுள்ள மலர்கள் அத்தலைவியின் முகம், கண், மூக்கு, தனம், கை ஆகியவற்றைக் குறிப்பன. மேலும் இம்மலர்கள் முறையே மருதம், நெய்தல், முல்லை, பாலை, குறிஞ்சி நிலங்கட்குரியன.

பேராசிரியர் இப்பாடலின் பொருட்சிறப்பைக் கூறுமிடத்து “இப்பாடற்குரிய காட்சி என்னும் துறை குறிஞ்சி நிலத்திற்கு உரியதாயினும் நிலமயக்கமாக ஏனைய நிலங்கட்கும் உரிய பூக்களையும் கூறியது பல நிலங்களிலும் சென்று துய்க்கும் இன்பத்தைத் தில்லையே தரும் என்பதை உணர்த்தற் பொருட்டேயாகும். மேலும் பாலைக்குத் தனியே நிலமில்லை என்பதை ஆசிரியர் அந்நிலப்பூவுக்கு அடைமொழி தாராமையால் உணர்த்தினார்” என்கிறார். மேலும்”ஓரிடத்துக் கலியாணம் நடந்தால் எல்லா நிலத்தவரும் வந்து தம்மிடமுள்ள அணிகலன்களை அளித்துச் சிறப்பிப்பது போல எல்லா நிலங்களும் தத்தம் மலர்களை அளித்துக் குறிஞ்சியைச் சிறப்பித்தன” எனவும் கூறுகிறார்.

அடைமொழி:

   
அடைமொழி தருதலால் ஒரு பொருள் சிறப்பெய்தலும் உண்டு, தாராமையால் சிறப்பெய்தலும் உண்டு. தலைவியின் முகம் முதலியவற்றைக் குறிக்கும் மலர்கட்கு அடைமொழி தந்த ஆசிரியர் அப்பெண்ணின் சிறந்த உறுப்பாகிய தனங்களைக் குறிக்கும் கோங்கிற்கு அடைமொழி கூறவில்லை. கோயில் குளம் முதலியவற்றுக்கு திரு என்னும் அடைமொழி கொடுத்துக் கூறுவோர் அக்