பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
31

New Page 1

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

கோயிலில் விளங்கும் சிவனுக்கு திரு என்னும் அடைமொழி கூறல் இல்லை. சிறந்த பொருளை அடைமொழியின்றிக் கூறலும் சிறப்பாகும் என்பதை இதனால் அறியலாம் என விளக்கியுரைக்கும் பேராசிரியர் உரை கற்போர்க்குப் பெருவிருந்தாக விளங்குவது.

கலவியுரைத்தலில் அம்மை அப்பர்:

   
தலைவன் தலைவியின் கலவியின்பத்தைப் பெற்ற பின்பு அதன் இயல்பைக் கூறுதல் எனப்படும் துறைஇது.

    சொற்பால் அமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
    நற்பால் வினைத் தெய்வம் தந்தின்று நான்இவ ளாம்பகுதிப்
    பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பில்
    கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே.

(தி. 8 கோவை பா.8)

“பெரும்பற்றப்புலியூர்ப் புனிதனின் பொதிய மலையிடத்துக் களவொழுக்கமாக அமுது இவளென்றும் யான் சுவையென்றும் கூறுமாறு ஊழ் எங்களைக் கூட்டிற்று, நான் என்றும் இவளென்றும் கூற ஒண்ணாதவாறு நாங்கள் கூடிய கூட்டத்தின் அழகை, யார் அறிந்து கூற இயலும்” என்பது இப்பாடலின் பொருளாகும். இங்கும் தத்துவம் சொல்லியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. அமுது தலைவி, சுவை தலைவன் என்பதே அது. சொல்சக்தி என்றால் அச்சொல்லால் குறிக்கும் பொருள் சிவமே என்பது குறிக்கப்படுகிறது. காண்க!

   
திருக்கோவையாரின் ஒவ்வொரு பாடலிலும் உலகியற் பொருளோடு மெய்ப்பொருள் இயல்புகளையும் மணிவாசகர் கூறியருளியுள்ளார். அவற்றை உரையாசிரியர்கள் பலரும் இனிது எடுத்து சிவத்தின்வேறாய் நில்லாது அதன்கண் அழுந்தி ஒடுங்கிய வழியே உளதாவது என்பது இதனால் உணர்த்தப்படுவதாகக் கூறியுள்ளனர். “நான் இவளாம் பொற்பு” என்றது நான் பிரமமாகின்றேன் என்னும் பொருளையுடைய அகம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தையும், பிரமம் நீ யாவாய் என்னும் பொருளையுடைய தத்துவமசி என்ற மகா வாக்கியத்தையும் உணர்த்து குறிப்புடையது எனக்கூறுவர். அத்துவிதம் இரண்டு பொருள்கள் கலப்பினால் ஒன்றாதலையும் பொருள் தன்மையால் வேறாதலையும் குறிக்கும். அவ்வத்துவித நிலையை இப்பாடல் குறிக்கிறது.