பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
308

பகற் குறி

    நனைகெடச் செய்தன மாயின்
        நமைக்கெடச் செய்திடுவான்
    தினைகெடச் செய்திடு மாறுமுண்
        டோஇத் திருக்கணியே.

141

_____________________________________________________________

கண்டார்க்கு அமிழ்தாய் - அம்பலத்தின்கணின்று கண்டார்க்கு அமிழ்தமாய்; வினைகெடச் செய்தவன் விண் தோய்கயிலை மயில் அனையாய்-நம் வினைகெடும்வண்ணஞ் செய்தவனது விண்ணைத் தோயாநின்ற கயிலையின் மயிலை யொப்பாய்; நனைகெடச் செய்தனம் ஆயின் - அரும்பியஞான்றே நனையைக் கெடும் வண்ணஞ் செய்தேமாயின்; நமைக் கெடச் செய்திடுவான் இத்திருக்கணிதினை கெடச் செய்திடுமாறும் உண்டோ - நம்மைக் கெடுப்பான் வேண்டி இத்திருவாகிய கணி தினைகெட முயலுமாறுமுண்டோ? யாமது செய்யப்பெற்றிலேம் எ-று.

    கனைகடற்செய்த வென்றதனான் நஞ்சின்பெருமை கூறினார். செய்யாதநஞ்சிற் செய்தநஞ்சு கொடிதாகலின், அதன் கொடுமை விளங்க, செய்தநஞ்சென்றார். அமிழ்தாதல் அமிழ்தின் காரியத்தைச் செய்தல். கண்டார்க் கென்றதனான், அல்லாதவமிழ்தோடு இவ்வமிழ்திற்கு வேற்றுமை கூறியவாறாம். கெடச்செய்திடுவா னென்னுஞ் சொற்கள் ஒருசொன் னீரவாய், கெடுப்பானென்னும் பொருள்பட்டு, நம்மை யென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. வினைகெடச் செய்தவனென்பது முதலாயினவற்றிற்கு மிவ்வாறுரைப்பினுமமையும். திரு: சாதிப் பெயர். கணி: தொழிற் பெயர். நல்லகணி யென்றிழித்துக் கூறினாளாக வுரைப்பாருமுளர்.

141