பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
34

அவ

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

அவ்விருவரும் மீண்டு வந்தார்களோ என எண்ணி மகிழ்ந்தேன். நும்போன்ற இருவர் இவ்வருஞ்சுரத்தில் சென்றனரோ உரைமின் எனக்கேட்டான். அதற்கு அத்தலைவன் கூறிய விடை நம்மை வியக்கவைக்கும் நிலையில் தமிழ்ப்பண்பை விளக்குகின்றது.

    புலியூர்க்கண் என்னை ஒரு பொருளாக மதித்து ஆண்ட இறைவனது மலைக்கண் சிங்கத்தினை ஒப்பானாகிய தலைவனை யான் கண்டேன் எனச் செவிலிக்கு மறுமொழி கூறிய தலைவன் தன் அருகே நின்ற தலைவியைப் பார்த்து, “தூண்டா விளக்கனையாய், அத்தலைமகனின் அயலே அன்னை சொல்லியது யாது? அன்னை கேட்பதற்கு நீ விடை அளிப்பாயாக” எனச் சொல்லி நின்றனன் என்னும் பாடற்பொருள் பிறிதொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத தமிழ்ப் பண்பை விளக்குவதாக உள்ளது.

கண்ணயந்துரைத்தல்:

   
தலைவன் தலைவியின் அவயவ அழகை உரைக்குமிடத்து அவளது கண்களின் அழகை விவரிக்கும் பாடல் மணிவாசகர் சிவபிரான் மீது கொண்டுள்ள அளவற்ற பக்திச் சிறப்பை இனிதெடுத்து விளம்புவதாக அமைந்துள்ளது.

    ஈசற்கு யான்வைத்த அன்பின்அகன்று, அவன் வாங்கியஎன்
    பாசத்திற் காரென்று, அவன் தில்லையின் ஒளிபோன்று,  அவன்தோள்
    பூசத்திருநீறு எனவெளுத்து, ஆங்கவன்பூங்கழல்யாம்
    பேச்திருவார்த்தை யிற்பெருநீளம் பெருங்கண்களே.

(தி.8 கோவை 109)

தலைவியின் கண்கள் யான் தில்லைப் பெருமானிடம் கொண்டுள்ள அன்புபோன்று அகலமானது. அவன் என்பால் இருந்து நீக்கிய பாசத்தைப் போன்று கருமையானது. அவன் தில்லையின் ஒளிபோல ஒளியுடையது. அவன் தன் செந்நிறமான தோள்களில் பூசிய திருநீறுபோலச் செம்மையின் மேல் பூத்த வெண்மையுடையது. அவன் புகழ்போல நீண்டது எனக் கூறும் இப்பாடல் மணிவாசகர் திருவெம்பாவையில் மழை வாழ்த்தாகக்கூறும் ‘முன்னிக்கடலை’ (தி. 8 திருவெம்பாவை பா. 16) என்னும் பாடலில் அம்மையின் அழகையே உவமிக்கும் அமைப்பில் விளங்குவதாகும்.

   
பக்திச்சுவை நனி சொட்டப்பாடிய சேக்கிழாரும் இத்தகைய உவமைகளைக் கையாளுவதைப் பெரியபுராணத்தில் காணலாம். அடியவர் உள்ளம் புனிதமாக விளங்குவதைச் சேக்கிழார், பூசும