பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
35

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

நீறுபோல் உள்ளும் புனிதர்கள் எனக் கூறுவதையும், அடியவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தலையால் வணங்குவது போல நெற்பயிர்கள் கதிர் முற்றித் தலைசாய்ந்தன எனக்கூறுவதையும் பெரியபுராணத்துள் காணலாம்.

உணர்ந்தார்க்கும் உணர்வரியோன்:

இறைவனை உணர்ந்தவர்கள் ஞானியர்கள். அவர்கள் ஒரு முறை உணர்ந்தபடியேதான் இருப்பான் இறைவன் என்று சொல்ல இயலாது. அவன் பல கோணங்களிலும் பலபடியாயிருப்பான் என்பதே உண்மை. ‘அது பழச்சுவை என, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென, அமரரும் அறியார்’ (தி.8 திருப்பள்ளி. பா.7) என்னும் மணிமொழியை உணர்க. மேலும் அதே திருப்பள்ளியெழுச்சிப் பகுதியில், “கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை’ என்பதால், இறைவனது முழுமுதல் தன்மையை இதுவரை எவரும் முற்றும் உணர்ந்திலர். கண்டிலர் என்பதை இப்பாடலும் உணர்த்துகிறது.

    அவனை உணருந்தோறும் புதிதாய்ப் பற்பல உண்மைகளை உணர்வது போல, இத்தலைவியைப் புணரும்தோறும் புதிதாய்ப் பற்பல அநுபவங்களை உணரலாம் என்று போற்றி உரைத்துள்ளமை, சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துவனவாயுள்ளன. அப்பாடல் காண்க.

    உணர்ந்தார்க்குஉணர்வரியோன் தில்லைச்சிற்றம்பலத்தொருத்தன்
    குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடைத்தோள்
    புணர்ந்தால் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்
    மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல் வளர்கிறதே.

(தி.8 கோவை. பா.9)

கூம்பல் அங்கைத்தலம்: 

   
கூப்பிய கைகளை உடையஅன்பர்களின் என்பும் கரைந்து உருகுமாறு தில்லையிலே ஆனந்தக் கூத்தாடுகின்றான் நடராஜப் பெருமான். அதேபெருமான் தில்லையைப் பாடும் பத்தியில்லாதவர் எப்படி மெலிந்து துவள்கின்றனரோ அதைப்போல் இவளுடைய மெல்லிடை மெலிந்து துவள்கின்றது என்று பெருமானது அருளின் பெருமையும் நிலையாத மருளின் சிறுமையும் (தி.8 கோவை பா. 11) இப்பாடலில் குறித்துள்ளமை அறிந்து மகிழ்தற்குரியது. அப்பாடல் காண்க.