பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
344

14

14.23 இரக்கங்கூறி வரைவு கடாதல்

   
இரக்கங்கூறி வரைவு கடாதல் என்பது களவுவிரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லுநெறிக்கண் நினக்கிடை யூறுண்டாமென்னு மச்சத்தால் அவளழுதிரங்கா நின்றாளென்று, நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாயெனத் தலைமகளதிரக்கங் கூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

170. பைவா யரவும் மறியும்
        மழுவும் பயின்மலர்க்கை
    மொய்வார் சடைமுடி முன்னவன்
        தில்லையின் முன்னினக்காற்

____________________________________________________________

14.23.  அதிர்கழலவன் அகன்றவழி
       யெதிர்வதறியா திரங்கி யுரைத்தது.

   
இதன் பொருள்: மன்ன-மன்னனே; இச் சிறியாள் பெருமலர்க்கண் மை வார் குவளை-நீ செல்லு நெறிக்கண் நினக்கிடையூறுண்டா மென்னு மச்சத்தால் இச்சிறியாளுடைய பெரிய மலர்போலுங் கண்களாகிய கருமையையுடைய நெடிய குவளைகள்; நீள்முத்த மாலைகள் விடும்-நீண்டமுத்தமாலைகளைப் புறப்பட விடா. நிற்கும், அதனான் நினக்கிடையூறின்மையை யிவளறிய; தில்லையின் முன்னினக் கால்-நின்பதியாகிய தில்லையெல்லையிற் சென்று கிட்டினால்; செவ்வாய் கரு வயிர்ச் சேர்த்து-நின் செவ் வாயைக் கரிய கொம்பின்கட் சேர்த்தி யூதவேண்டும் எ-று.

    பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில்-படத்தையும் பெரியவாயையு முடைய அரவும் மான்மறியும் முழுவாளும் விடாது நிகழும்-மலர்க்கை மொய் வார் சடை முடி முன்னவன் தில்லை-மலர்போலுங் கையையும் நெருங்கிய நெடிய சடைகளானியன்ற முடியையுமுடைய எல்லாப்பொருட்கு முன்னாயவனது தில்லையெனக் கூட்டுக.

   
குறிஞ்சிநிலத்திற்குரிய மக்கள் கோலத்தனாய் வருமாதலின், வயிர் கூறப்பட்டது. மலர்க்கணென்பது உவமை கருதாது கண்ணென்னுந் துணையாய் நின்றது. கண்ணாகிய குவளைப் பெருமலரென்று கூட்டு வாரும், மலர்தலையுடைய கண்ணென்பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல்.

170