பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
350

14

 இரவுக் குறி

14.28 காப்புச் சிறைமிக்க கையறுகிளவி

   
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி என்பது காமமிக் கெதிர்ப்பட விரும்பாநின்ற தலைமகள், இவ்விடையீடெல்லா நீந்தி ஒருவழியான் வந்தாராயினும் இஞ்ஞாளி குரைதரா நின்றமையின் யாமிவரை யெதிர்ப்படுதலரிதெனக் காப்புச்சிறைமிக்கு வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-

175. இன்னற வார்பொழிற் றில்லை
        நகரிறை சீர்விழவிற்
    பன்னிற மாலைத் தொகைபக
        லாம்பல் விளக்கிருளின்

___________________________________________________________

14.28.  மெய்யுறு காவலிற்
      கையறு கிளவி.


   
இதன் பொருள்: இன் நறவு ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில்-இனிய நறவார்ந்த பொழிலையுடைய தில்லைநகர்க்கிறைவனாகிய வனது சீரையுடைய விழவின்கண்; பல் நிறமாலைத் தொகை பகலாம்-மாணிக்க முதலாயினவற்றாற் பல நிறத்தை யுடையவாகிய மாலைகளின் றொகைகளான் இராப்பொழுதும் பகலாகாநிற்கும்; பல் விளக்கு இருளின் துன் அற உய்க்கும் - அதுவேயுமன்றிப் பலவாகிய விளக்கு இருளின் பொருந்துதலறத் துரக்கும்; இல்லோரும் துயிலின் - இவ்விடையீடேயன்றி ஒருபொழுதும் துயிலாத இல்லோரு மொருகாற்றுயில்வராயின்; துறைவர் கொன்மிக்கநிற வேலொடு வந்திடின் - துறைவர் அச்சத்தைச் செய்யு மிக்க நிறத்தையுடைய வேலோடொருகால் வருவராயின்; ஞாளி குரை தரும்-அப்பொழுது நாய் குரையாநிற்கும்; அதனால், அவரை நாமெதிர்ப்படுத லரிதுபோலும் எ-று.

   
மாலைத்தொகையும் இராப் பகலாகாநிற்கும் பல்விளக்கும் இருளைத் துரக்குமென்றுரைப்பினுமமையும். இல்லோருந் துயிலினென்றதனான், அதுவுமோ ரிடையீடு கூறப்பட்டதாம். மிக்கவே லென்றியைப்பினு மமையும். மெய்யுறுகாவல் - பிழையாத மிக்க காவல் இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவுகடாவு வாளாம்; யாருங் கேட்பாரில்லையாயின் அயர் வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன்.

175