பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
37

New Page 1

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

பொய்யுடையார் மெய்யுடையார்: 

   
பொய்யுடையார்க்கு  அரன் அகப்படாது அகல்வான். மெய்யுடையாருக்கு அவ்வரன் மிகவும் நெருக்கமாய் இருந்து அருள் புரிவான். இஃது எது போன்றது என்பதைத் தலைமகன் குறிப்பிடுகின்றான். அவள் காக்கும் தினைப்புனத்தை அகன்றால் அவளும் அகலும், நெருங்கின் நணுகும் என்பது போலாகின்றதாம். இப்பாடல் பகுதி காண்க.

    “பொய்யுடையார்க்கு அரன்போல் அகலும், அகன்றால், புணரின்
     மெய்யுடையார்க்கு அவன் அம்பலம்போல் மிக நணுகும்”

(தி.8 கோவை பா.48)

காகத்திரு கண்ணிற்கு ஒன்றே மணி: 

   
காகத்திற்குக் கண்கள் இரண்டு உள. ஆனால் அக்கண்கட்கு விழி ஒன்றே உளது. இதைப் பலர் அறியார். இதனைப்போலத் தலைவனுக்கும் தலைவிக்கும் உடல் இரண்டே தவிர, உயிர் ஒன்றாய் உளது என அறிவிக்கின்றார். தத்துவத்துறையில் இறைவனும் இறைவியும் வேறல்ல. ஒரு பொருளே இரு தன்மைப்பட்டுள்ளது. எனவே தலைவனும் தலைவியும் உடம்பால் இரண்டாயிருப்பினும், உணர்வால் ஒன்றாய் இயைந்து இயங்குகின்றனர் எனத் தெரிவிக்கின்றார் மணிவாசகர். இப்பாடல் பகுதி காண்க.

    “காகத்திரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு இருவர்
     ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம்”

(தி.8 கோவை பா.71)

முனிவரும் மன்னரும்: 

   
முற்றுந் துறந்த முனிவராயினும் முற்றும் தொடர்ந்த மன்னராயினும் அவ்விருவரும் நினைத்தவற்றை நிறைவேற்றப் பொருள் வேண்டும். முனிவர் முன்னுவது அறம் செய்வது. மன்னவர் முன்னுவது இன்பம் நுகர்வது. இரண்டிற்கும் பொருள் இன்றியமையாதது. அறம், பொருள், இன்பம் மூன்றின் நடுவணதை எய்த, இருதலையும் எய்தும் என்பது நாலடியார் (பா. 114). “ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு” என்பது குறள் (770). இதனால் பொருளே அறம், இன்பம் இரண்டிற்கும் பெருந் துணையாவது. எனவே பொருள் பற்றிய பிரிவு தவிர்க்க முடியாதது என்பதைத் தோழி வாயிலாகத் தலைவிக்கு அறிவிக்கச் செய்கிறான் தலைமகன். இப்பாடல் பகுதி காண்க.