பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
38

New Page 1

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

“முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்”

(தி.8 கோவை பா. 332)

அறிவன் நூற்பொருள்: 

   
அறிவன் நூல் என்பது ஆகமத்தை உணர்த்துவதாகும். திருக்கோவையார் உலக இயல்புகளோடு அறிவன் நூற்பொருளை ஒவ்வொரு திருப்பாடலிலும் உணர்த்தியருள்கிறார். இவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடான பன்னிரு திருமுறை வரலாற்றில் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் தொகுத்து எழுதி வெளியிட்டுள்ளதை இங்குத் தருகின்றோம்.

    “சிவபெருமானுடன் பிரிவற ஒன்றாயுள்ள பராசக்தியை ‘யாவையுமாம் ஏகம்’ என 71ஆம் திருப்பாடலிலும், பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை நிற்றலின் நிகழ்காலம் புலனாக என்பிறவி கெட்டு இன்று அழிகின்றதாகிய தாள் அம்பலவன் என 76ஆம் பாடலிலும், சிவதத்துவத்தினின்றும் சத்திதத்துவமும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவமும் தோன்றும் என்பதனைத் தன்னொருபாலவள் அத்தனாம் மகனாம்தில்லையான் என 112ஆம் பாடலிலும், பாசமாகிய தளையிற்பட்டுக் கிடத்தல் உயிரியல்பு என்பதும், உயிர்களின் பாசத்தினை அறுத்து ஆண்டு அருள்புரிதல் இறைவன் இயல்பு என்பதும் ஆகிய உண்மையினை, பாசத்தளையறுத்தாண்டு கொண்டோன் என 115ஆம் பாடலிலும், உயிர்கட்குப் புகலிடம் இறைவனே என்பதனை 143ஆம் பாடலிலும், சிவத்தைத் தலைப்பட்டு இரண்டறக் கலந்த ஆன்மா மீளவும் அதனை விட்டு நீங்கிப் பிறவியுட்புகுதல் இல்லை என்பதனைப் ‘புகுநர்க்குப் போக்கரியோன்’ என 188ஆம் பாடலிலும், தில்லையம்பலத்தோனாகிய இறைவனது அருள் எல்லையினைத் தலைப்பட்டவர்களாகிய சீவன்முத்தரது இயல்பு உலகமெங்கும் பரவி அகண்டபரிபூரணராய் இருத்தல் என்னும் மெய்மையினை ‘அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் நலம்பாவியமுற்றும்’ என 197ஆம் பாடலிலும் அடிகள் குறித்துள்ள திறத்தினைப் பேராசிரியர் அவ்வத்திருப்பாடல்களின் உரையில் நன்கு விளக்கியுள்ளார்.”

தத்துவ நோக்கு:

   
திருக்கோவையாருக்குத் தத்துவநோக்குக் கற்பித்து சீகாழித் தாண்டவராயர் என்பார் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளர்.