பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
376

16


16.2 மகட்பேச்சுரைத்தல்

   
மகட்பேச்சுரைத்தல் என்பது பருவங்கூறிய தோழி, படைத்து மொழியான் அயலவர் பலரும் மேன்மேலும் பொன்னணியக் கருதாநின்றார்; நீ விரைய வரைவொடு வருவாயாதல் அன்றியுடன்கொண்டு போவாயாதல் இரண்டினுளொன்று துணிந்துசெய்யக் கருதுவாய்; அதனை யின்றே செய்வாயாகவெனத் தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

195. மணியக் கணியும் அரன்நஞ்ச
        மஞ்சி மறுகிவிண்ணோர்
    பணியக் கருணை தரும்பரன்
        தில்லையன் னாள்திறத்துத்
    துணியக் கருதுவ தின்றே
        துணிதுறை வாநிறைபொன்
    அணியக் கருதுகின் றார்பலர்
        மேன்மே லயலவரே.

195

____________________________________________________________

16.2.  படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.

   
இதன் பொருள்: துறைவா - துறைவா; தில்லை அன்னாள் திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணி - தில்லையையொப் பாடிறத்து நீ துணிந்து செய்யக்கருதுவதனை இன்றே துணிந்து செய்வாயாக; அயலவர் நிறை பொன் மேன்மேல் அணியக் கருது கின்றார் பலர் - அயலவர் நிறைந்த பொன்னை மேன்மேலு மணியக் கருதுகின்றார் பலர் எ-று.

   
மணி அக்கு அணியும் அரன் - மணியாகிய அக்கையணியுமரன்; நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன் -நஞ்சையஞ்சிக் கலங்கிச்சுழன்று தேவர் சென்று பணிய அந்நஞ்சான்வருமிடர்க்கு மருந்தாகத் தன் கருணையைக் கொடுக்கும் பரன்; தில்லை - அவனது தில்லையெனக் கூட்டுக.

   
அக்குமணி யெனினுமமையும். அலங்காரம்: ஒற்றுமைக் கொளுவுதல். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அது.

195