பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
377

16

உடன் போக்கு

16.3 பொன்னணிவுரைத்தல்

   
பொன்னணி வுரைத்தல் என்பது படைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக முன்றிற்கணின்று முரசொடு பணில முழங்கப் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார்; இனி நின்கருத்தென்னோவெனத் தலைமகனுக்கு அயலவர் பொன்னணி வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

196. பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
        மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
      ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
      நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
      தழங்கும் மணமுரசே.

196

____________________________________________________________

16.3.  பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
      நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.

   
இதன் பொருள்:
 கமழ் பூந் துறைவ - கமழ்பூந் துறைவனே; பாப்பணியோன் தில்லைப் பல் பூ மருவு சில் ஓதியை - பாம்பாகிய வணியையுடையவனது தில்லைக்கணுளளாகிய பலவாகிய பூக்கள் பொருந்திய நுண்ணிய வோதியையுடையாளை; நல் காப்பு அணிந்தார் - நல்ல காப்பை யணிந்தார்கள்; இனி பொன் அணிவார் - இனிப் பொன்னையணிவார்; கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று - கலியாணத்துக்குப் பொருந்திய கோப்புக்களை யணிந்த வானைத்தோயுங் கொடிகளையுடைய முன்றிற்கணின்று; மணமுரசு இவை ஏர் குழுமி மாப்பணிலங்கள் முழங்கத் தழங்கும் - மணமுரசங்களிவை ஏரொடு குழுமிப் பெரியசங்கங்கள்  முழங்கத்தாமொலியாநின்றன; இனியடுப்பது செய்வாயாக எ-று.

    தில்லைப் பல்பூவென் றியைப்பினு மமையும். காப்பென்றது காவலை. அணிவாரென்றது முற்றுச்சொல். கோப்பணி முன்றிலென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை.

196