பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
397

16

உடன் போக்கு

16.20 ஓம்படுத்துரைத்தல்

   
ஓம்படுத்துரைத்தல் என்பது கொண்டுசென்றுய்த்து இருவரையும் வலஞ்செய்து நின்று, மறை நிலைதிரியினும் கடன் முழுதும் வற்றினும். இவளிடத்து நின்னரு டிரியாமற் பாதுகாப்பா யெனத் தோழி தலைமகளைத் தலைமகனுக் கோம்படுத் துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்-

213. பறந்திருந் தும்பர் பதைப்பப்
        படரும் புரங்கரப்பச்
    சிறந்தெரி யாடிதென் தில்லையன்
        னாள்திறத் துச்சிலம்பா
    அறந்திருந் துன்னரு ளும்பிறி
        தாயின் அருமறையின்
    திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
        வற்றுமிச் சேணிலத்தே.

213

_____________________________________________________________

16.20.  தேம்படு கோதையை
      யோம்ப டுத்தது.


   
இதன் பொருள்: சிலம்பா - சிலம்பா; இருந்து உம்பர் பதைப்பப் பறந்து படரும் புரம் கரப்ப - இருந்து உம்பரிடை விடாது நடுங்கப் பறந்து செல்லும் புரங்கள் கெட; சிறந்து எரி ஆடி தென் தில்லை அன்னாள் திறத்து - பொலிந்து எரியான் விளையாடுமவனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை யொப்பாளிடத்து; அறம் திருந்து உன் அருளும் பிறிது ஆயின் - அறந் திருந்துதற்குக் காரணமாகிய உனதருளும் வேறுபடுமாயின்; இச்சேண் நிலத்து-இவ்வகன்ற நிலத்து; அருமறையின் திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் - அரிய மறைகளின் முறைமை பிறழக் கடலு மெஞ்சாது வற்றும் எ-று.

   
அறந்திரிந்தென்பது பாடமாயின், அறந்திரிந்தரு மறையின்றி றந்திரிந்தென மாற்றியுரைக்க, அறந்திரிந்தாற்போல நின்னருளும் பிறிதாயினென வொருசொல் வருவித்துரைப்பினு மமையும். அருமறையு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஓம்படுத்தல்.

213