உ
உ
குருபாதம்
பதிப்புரை
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் -
கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என் றுணர்.
- ஒளவையார்
பன்னிரு திருமுறைகளில் எட்டாவதாக
இலங்குவன மணிவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். மணிவாசகர் பக்திச்
சுவைக்கு முதன்மை கொடுத்துப் பாடியது திருவாசகம். அப்பக்தியை இலக்கியச் சுவையோடு கூட்டிப்
பாடியருளியது திருக்கோவையார்.
தமிழ் மொழியில் வழங்கும் தொண்ணூற்றாறு
வகைப் பிரபந்தங்களில் கோவை என்பதும் ஒன்றாகும். இதனை இலக்கண விளக்கப் பாட்டியல்,
“முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத் தாகி
நலனுறு கலித்துறை நானூ றாக
ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி
விளங்கக்
கூறுவ தகப்பொருட் கோவை யாகும்”
- இலக்கண விளக்கப் பாட்டியல்,
நூற். 56
எனக் கூறுகின்றது. திருக்கோவையார்
கோவை இலக்கியங்கட்கெல்லாம் மூல இலக்கியமாக விளங்கும் சிறப்பினது. திருச்சிற்றம்பலக்
கோவையார் என்பது இந்நூலின் பெயராகும்.
ஆரணங் காண்என்பர் அந்தணர்
யோகியர் ஆகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமநன்
னூலதென்பர்
ஏரணங் காண்என்பர் எண்ணர் எழுத்தென்பர்
இன்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச்
செப்பிடினே.
- ஆன்றோர் வாக்கு
|