பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
43


குருபாதம்

அணிந்துரை

டாக்டர் திருமதி. இராதா தியாகராசன் அவர்கள்
(முன்னாள் துணை வேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்)
மதுரை.

தருமை ஆதீன அதிபர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம், திருக்கோவையார் பேராசிரியர் உரையுடன் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.

எட்டாந் திருமுறையாகிய திருவாசகம், திருக்கோவையார் - நூல்களை ஒரு தொகுதியாகப் பெரும்புலவர் சி. அருணைவடிவேல் முதலியார், உரையுடன் முன்பு வெளியிட்ட ஆதீனத்தார், இப்பொழுது பழைய உரைகளுள் சிறப்பிடம் பெறும் பேராசிரியர் உரையுடன் திருக்கோவையாரைத் தமிழுலகிற்கு நல்குவது பாராட்டற்குரியது.

பேராசிரியர் உரைக்கும் முற்படத் திருக்கோவையாருக்குப் பழையவுரையொன்று உண்டு. அதனைச் செய்த ஆசிரியர் பெயர் தெரிந்திலது. அதனினும் பன்மாண் சிறப்புடையதாக உரை வகுத்த பேராசிரியரும் தொல்காப்பியத்துக்கு உரைகண்ட பேராசிரியரும் ஒருவர்தாமா என்பது பற்றி அறிஞரிடையே ஐயம் நிகழ்கின்றது.

சொற்களுக்கும், உவமைகளுக்கும், நயம்படப் பொருள் விளக்கம் தரும் ஒப்புமை நோக்கி, இவ்விருவரும் ஒருவரே எனக் கருதக் கூடுமெனினும், இவர்கள் வேறுபட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றுட் சில வருமாறு: 

    1) திருக்கோவையார் உரையில் பயன்படுத்தப்பெறும் தொல்காப்பிய
    மேற்கோள்களில் ஓரிடத்தும், இவர் தொல்காப்பிய உரையாசிரியர்
    என்னும் குறிப்பைக் காணவியலவில்லை.