பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
431

16

உடன் போக்கு

16.51 புணர்த்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்

   
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் என்பது வேதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், நும்மைக் கண்டு, என்னாற்றேடப்படுகின்றார் மீண்டார்களென்று கருதி மகிழ்ந்தேன்; அதுகிடக்க, இவ்வாறு நும்மோடொத்த வொழுக்கத்தினராய் முன்னே யிருவரைப் போகக்கண்டீரோவெனப் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

244. மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
        நும்மையிம் மேதகவே
    பூண்டா ரிருவர்முன் போயின
        ரேபுலி யூரெனைநின்

_____________________________________________________________

16.51.  புணர்ந்துடன்வரும்புரவல னொருபால்
      அணங்கமர்கோதையை யாராய்ந்தது.


   
இதன் பொருள்: நும்மைக்கண்டு மீண்டார் என உவந்தேன்-நும்மைக்கண்டு என்னாற் றேடப்படுகின்றார் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன்; இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே - இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக்கத்தையே பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் எ-று.

    புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளி அன்னானைக் கண்டேன் - புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய் - தூண்ட வேண்டாத விளக்கையொப்பாய்; அயல் அன்னை சொல்லியது என்னையோ -அவனதயல் அன்னைசொல்லியதி யாது? அதனையவட்குச் சொல்லுவாயாக எ-று.

   
அருவரைக்கட் கண்டேனெனக் கூட்டினு மமையும். ஆளியன்னா னென்றதனால், நின்மகட்கு வருவதோரிடையூ றில்லையெனக் கூறினானாம். தூண்டா விளக்கு: இல்பொருளுவமை. மணிவிளக்கெனினு மமையும். அணங்கமர் கோதையை - தெய்வ நாற்றமமர்ந்த கோதையை யுடையாளை. ஆராய்ந்தது-வினாயது. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்தவுவகை. பயன்: அது.

244